சிறுகதை

ஒப்பீடு | கரூர்.அ.செல்வராஜ்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதே நாளில் தன் மகள் ஜெயஸ்ரீயிடம் அம்மா மாலதி,

‘‘ஜெயா! என்னடி, 362 மார்க் தான் வாங்கியிருக்கிறே, நான் உன் படிப்பிலே ஏதாவது குறை வச்சேனா? கேட்ட போது கேட்ட பொருளை வாங்கித் தந்தேன். இங்கிலீஷ் மீடியம் பள்ளிக் கூடத்தில் தான் படிக்கணும்னு அடம் பிடிச்சே. என் சக்திக்கு மேலே கடனை வாங்கி உன்னை படிக்ச வச்சேன். ஸ்கூலுக்கு படிக்கப் போறதுக்கு ஆட்டோவிலே அனுப்பி வச்சேன். உனக்கு இத்தனை வசதிகள் செய்து கொடுத்தும் கம்மியான மார்க் வாங்கி இருக்கிறியே. உன்னை விட வசதி இல்லாத குடும்பத்துப் பொண்ணுங்க எல்லாம் 500 மார்க்குக்கு மேலே வாங்கியிருக்காங்களே. உன்னாலே முடியலையே’’ என்றாள்.

அம்மாவின் திட்டுக்களை வாங்கிக் கொண்டு அழுகைக் குரலில் பேசினாள் ஜெயஸ்ரீ. ‘‘அம்மா! என்னாலே முடிஞ்ச வரைக்கும் கஷ்டப்பட்டுப் படிச்சேன். ஆனா, அதிகமான மார்க் வாங்க முடியலே. அதுக்கு ஒரு காரணமும் இருக்குது. வெளியூர் வேலைக்குப் போயிருந்த என் அப்பாவாலே எனக்கு பரீட்சை நடந்த நாட்களிலே வீட்டுக்கு வர முடியலே. அப்பாவின் ஆதரவு எனக்கு கிடைக்காத காரணத்தாலே தான் மார்க் குறைந்து போச்சு’’ என்றாள் ஜெயஸ்ரீ.

‘‘ஜெயா! நீ சொல்லறது சரியில்லை. சில பொண்ணுங்களுடைய அப்பாக்கள் வெளி நாட்டிலே தான் வேலை செய்றாங்க. அவங்க பொண்ணுங்க அதிகமான மார்க் வாங்கியிருக்காங்களே. இதுத்துப் பதில் என்ன சொல்லப் போற’’ என்றாள்.

அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் பக்கத்து வீட்டு பத்மப்ரியா வந்தாள்.

‘‘மாலா அக்கா! அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை, நடக்குதா? என்னக்கா, நீங்க செய்யிற காரியம் நல்லாவா இருக்குது? ஜெயா 12ஆம் வகுப்பு பாஸ் பண்ணியிருக்கா. அதுக்காக அவளைப் பாராட்டுங்க. அதைச் செய்யாமல் அவளைத் திட்டறது சரியில்லே.

ஒருவேளை அவள் பரீட்சையிலே பெயில் ஆயிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க’’ என்றாள்.

அதற்கு மாலதி ,

‘‘பத்மா! உன் மகள் 500 மார்க்குக்கு மேலே வாங்கியிருக்கா, நீ படிச்சவள் மகளுக்குப் பாடம் சொல்லித் தந்திருப்பே. ஆனா, நான் 5–ம் வகுப்பு வரை தான் படிச்சிருக்கேன். என் மகள் நல்லா படிச்சு ஒரு நல்ல வேலைக்கு வரவேண்டாமா? என்னை மாதிரி கூலி வேலைக்கு என் மகளும் போகணுமா? புரோட்டா மாஸ்டர் பொண்ணு கூட 520 மார்க்கு வாங்கியிருக்காளாம். இதுக்கு என்ன சொல்லப் போறே’’ என்றாள் .

‘‘மாலா அக்கா! பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் தனி ரகம். ஒரு பறவைக்கு உள்ள அழகு இன்னொரு பறவைக்கு இருக்காது. ஒரு பறவைக்கு உள்ள திறமை மற்றொரு பறவைக்கு இருக்காது. குயிலைப் போல காக்கா பாட முடியுமா? மயிலைப் போல வான்கோழி ஆட முடியுமா? கொக்கின் நிறம் தனக்கில்லை என்று காக்கா வருத்தப்பட்டால் நிற மாற்றம் வருமா? மனிதர்களும் பல விதம். ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டுப் பேச முடியாது. அவரவர் குணமும் பண்பும் திறமையும் அவர்களுக்குரிய தனிச் சிறப்பு, அவரவர் முயற்சிக்கேற்ற சாதனை செய்வார்கள். ஒருவரை மற்றவரோடு ஒப்பீடு செய்வதை விட்டு விடலாமே’’ என்றாள் பத்மா.

புரிந்து கொண்ட மாலா மகளின் மேற்படிப்புக்கு தயாரானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *