வழக்கம்போல சாப்பிடும் கடையை விட்டு விட்டு அன்று அசைவ உணவு சாப்பிடலாம் என்று முடிவு செய்து குளிரூட்டப்பட்ட ஒரு பிரியாணிக் கடைக்குச் சென்றான் செந்தூரன்.
நடுத்தர வர்க்கத்திற்கு மேலே இருக்கும் மேல்தட்டு மக்கள் சாப்பிடும் உணவகமாக அது இருந்தது.
வாசலில் இருந்த உணவகத்தில் உள்ளே வரை சிவப்பு வெல்வெட்டால் அழகுபடுத்தியிருந்தார்கள் .
முழுவதும் கண்ணாடியால் வேயப்பட்டிருந்தது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளிருப்பதும் உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு வெளியில் இருப்பதும் தெரியும் அளவிற்கு உயர்தர நுட்பமான கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது அந்த அசைவ உணவகம் .
அந்தக் கண்ணாடியில் ஏசியின் குளிர் தாங்காமல் சொட்டுச் சொட்டாக தண்ணீர் நின்று கொண்டிருந்தது.
உள்ளே போவோமா? வேண்டாமா ? என்று பட்டிமன்றமே நடத்திய பிறகு தான் செந்தூரன் உள்ளே நுழைந்தான்.
கதவைத் திறந்ததும் அசைவ உணவின் வாசனை அவன் நாசியின் மீது முகாமிட்டுக் கொண்டது .எல்லாம் மொத்தமா சேர்ந்த வாசனையா இருக்கு. இந்த வாசனையை புடிச்சாலே போதும் போல .இப்படியே வீட்டுக்கு போயிரலாமா? என்று நினைத்தவனின் பசியை அந்த வாசனை இரட்டிப்பாக்கியது .
ஐந்து பேர் அமரும் ஓர் இருக்கையில் போய் அமர்ந்தான் செந்தூரன்.
அவன் அமர்வதைப் பார்த்துக் கொண்டே இருந்த ஒரு வெயிட்டர்
சார் நீங்க ஒரு ஆளா? என்று கேட்டான்.
ஆமா என்று தலையாட்டிய செந்தூரனிடம்
அப்படின்னா இந்த பக்கம் வந்து உட்காருங்க சார் என்று வெயிட்டர் சொல்ல
ஏன் என்று கேட்டான் செந்தூரன்.
அஞ்சு பேரு மொத்தமா வந்தா அதுல உட்காருவாங்க . அதுக்கு தான் என்று வெயிட்டர் சொல்ல
ஏய்யா அப்படினா நான் அஞ்சு பேர கூட்டிட்டு பிரியாணி சாப்பிட கூப்பிட்டு வரணுமா ? என்று சலித்தபடியே
இடம் மாறி அமர்ந்தான். செந்தூரன் கையில் மெனு கார்டு காெடுக்கப்பட்டது.அதைப் பிரித்துப் பார்த்தவனுக்கு மயக்கமே வந்தது .
எல்லாம் 300, 400 500 என்று விலைப்பட்டியல் இருந்ததால் நாக்கு வரை வந்த எச்சில் தொண்டைக்குள்ளே போய் தங்கியது .
கார்டு முழுவதும் பார்வையைப் பரவ விட்டு எது குறைச்சலான விலையில் இருக்கிறதோ அந்த அசைவ உணவை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தான்.
சுற்றி ஒரு பார்வை பார்த்தான். ஒவ்வொருவரின் எதிரிலும் அசைவ உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இவ்வளவும் என்னைக்கு சாப்பிட்டு வெளியே போறது . பார்த்தாலே நமக்குத் தல சுத்துது என்று மனதுக்குள் நினைத்த செந்தூரன் அவன் ஆர்டர் செய்த உணவு வந்ததும் சாப்பிட ஆரம்பித்தான்.
அவன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அவனுடைய வலது பக்கம் இரண்டு மூன்று பெண்கள் வந்து அமர்ந்தனர்.
அந்தப் பெண்களைப் பார்க்கும்போது அவர்கள் மேல்த் தட்டு வர்க்கம் போல தெரிந்தனர். ஒருத்தி கூட கூந்தலை முடிந்து கொள்ளவில்லை. முதுகு வரை பரப்பி விட்டு இதுதான் நாகரீகம் என்று அமர்ந்திருந்தார்கள்.
இவளுகள என்ன செய்றது? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட செந்தூரன் சாப்பிட்டுக் கொண்டே பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்தான்.
அந்தப் பெண்கள் கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமலும் தன் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு இல்லாமலும் விரித்துக் கிடந்த தலைமுடியை தன் கைகளை விட்டுக் கோதிக் கோதி தலையை அப்படி இப்படி ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த செந்தூரனுக்கு சாப்பிடவே மனம் வரவில்லை. என்ன இது ?சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். தலை முடிய எப்படி கோதிக்கிட்டு இருக்காங்க. முடி ஏதாவது வந்து விழுந்துச்சுன்னா எப்படி சாப்பிடுறது? என்று மனதுக்குள் கோபம் கொப்பளித்தது. ஆனால் வெளியில் சொல்வதற்கு கொஞ்சம் சங்காேசமாக இருந்ததால் அமைதியாக இருந்தான்.
இப்போது தலைமுடியை நீவி விட்டு இப்போது நிறுத்தி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்தப் பெண்கள் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும் அந்த நேரத்தில் ஒரு நூறு முறைக்கு மேல் தங்கள் கூந்தலை விரல் கொண்டு காேதி இருப்பார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனுக்கு கோபம் வந்தது.
இது ஹலோ உங்க வீட்டு பாத்ரூம் நினைச்சீங்களா? உங்க தலையில இருக்கிற முடி நீங்க காேதும் போது பறந்து வந்து சாப்பாட்டுல விழுந்தா எப்பிடி சாப்பிட முடியும்? ஆர் யூ ஆன் எஜுகேட்டட் என்று ஆங்கிலத்திலும் விலாசினான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண்கள்
ஸாரி கூடச் சொல்லாமல் செந்தூரனை முறைத்து பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்கள்.
கண்ட்ரி ஃப்ரூட்ஸ் இதுவா நாகரீகம் ? என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தான் செந்தூரன்.
பெண்கள் ஆர்டர் செய்த உணவும் வந்து சேர்ந்தது. அப்போதும் அந்தப் பெண்கள் தன் இடது கையில் தங்கள் கூந்தலை கோதிவிட்டுக்கொண்டே சாப்பிட்டனர்.
இதுகளை எல்லாம் சொல்லித் திருத்த முடியாது. இது நோய் போல என்று நினைத்து செந்தூரன் சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவி விட்டு சாப்பிட்டதற்கான பில்லைச் செலுத்தினான்.
அப்போதும் அந்தப் பெண்கள் தம் இடது கையால் தம் கூந்தலை வருடி விட்டுக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி சட்டென்று போய் அந்தப் பெண்ணின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து முடிந்து தன் கையில் இருந்த ரப்பர் பேண்ட்டை எடுத்து முடி போட்டு விட்டாள்.
ஹலோ என்ன பண்றீங்க? என்ன பண்றீங்க ? என்று அந்தப் பெண் கேட்டபோது
ம்…நல்லது செய்றேன். உனக்கு வேணா நீ செய்யறது நல்லதா தெரியலாம். ஆனா பொது எடத்தில அதுவும் சாப்பிடும் எடத்தில எப்படி நடந்துக்கணும்னு ஒனக்கு தெரியல. இனிமே எங்க போனாலும் தலையில் கையை விடுற பழக்கத்தை மாத்து. அது உனக்கு மட்டும் இல்ல. உன்னப் பெத்தவங்களுக்கும் தப்பான பேரு வந்து சேரும் என்று சொல்லிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.
தலை முடியை கோதிய அந்தப் பெண்ணுக்கு ரொம்பவே அவமானமாகப் போனது.
கூனிக் குறுகி சாப்பிட்டு முடித்து அந்த உணவகத்தை விட்டு வெளியே வந்த அந்தப் பெண். தலைக்கு அப்போதும் தன் கையைக் காெண்டு போனாள். கூந்தல் ரப்பரால் பேண்டால் கட்டப்பட்டிருந்தது. தனக்குள்ளே சிரித்துக் கொண்டு நடந்தாள் அந்தப்பெண்.
ஆனால் அந்தப் பெண் போட்ட ரப்பர் பேண்ட் அவள் தன் கூந்தலை அள்ளி முடி போட்டு ரப்பர் பேட்டை மட்டும் அவள் எடுக்கவே இல்லை.
செந்தூரன் உள்ளத்தில் மகிழ்ச்சி.