சிறுகதை

ஒப்பந்தம் – மு.வெ.சம்பத்

கருணாகரன் ஒன்பதாம் வகுப்பில் பெயில் ஆனதும் தனது படிப்பை நிறுத்திக் கொண்டார். பெற்றோர் எவ்வளவு சொல்லியும் படிப்பைத் தொடரும் நிலையில் அவர் மனம் செல்லவில்லை. வீட்டில் இருந்தால் ஏதாவது சண்டை வருமென நினைத்த அவர் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். வேலையில் நன்கு திறம்பட செய்ததால் நல்ல பெயர் எடுத்தார். இதற்குப் பின் ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தார். அரசாங்க வேலையில் சேர்ந்தால் நல்லதென நினைத்தார். அவரது பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் ஆலோசனை பெற்று அரசு துப்புரவு பணிக்கு விண்ணப்பம் செய்தார். சிபாரிசின் பேரில் துப்புரவுப் பணியில் சேர்ந்தார் கருணாகரன்.

சம்பளம் பற்றி கவலைப்படாமல் தனக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களில் முதலாக வலம் வந்தார். பின் எல்லோரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

மக்களிடம் குப்பையைத் தெருவில் கொட்டாதீர்கள். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வீட்டு வாசலில் வைத்து விடுங்கள் என்றார்.

நாட்கள் செல்ல செல்ல, இவரது கடின உழைப்பால் தெருக்கள் சுத்தமானது. சில வீடுகளில் உள்ளவர்கள் இவரை அலட்சியமாக பார்த்ததோடு மட்டுமல்லாமல் இவர் ஏதும் கேட்டால் எரிந்து விழுந்தார்கள். அதில் ஒரு வீடு தான் சண்முகம் சார் வீடு. சண்முகம் சார் நல்ல மனிதர் மற்றுமின்றி சமூக பொறுப்புள்ளவர். ஆனால் அவர் மனைவியோ நேர் எதிர் மறையானவர். அவருக்கு ஒரே மகள் பெயர் பிரியா. பிரியா அவரது அம்மாவிடம் ஏன் துப்புரவுத் தொழிலாளியை இப்படி பார்க்கிறாய். அவரும் மனிதர் தானே, அவர் அவருக்கு இட்ட பணியைச் செய்கிறார், கேவலமாக நினைக்காதே, குப்பையை வீட்டு வாசலில் வைத்து விடு; கொட்டாதே என்றதும் அவர் அம்மா பிரியாவைப் பார்த்து கண்டபடி ஏசினார். சண்முகம் அவர்கள் வீட்டில் இருந்தால் தான் அவர் மனைவி அடங்கியிருப்பார். கருணாகரனுக்கு இந்த வீட்டு வாசல் வந்ததும் சற்று முகம் சுளிக்கும்படி தான் இருக்கும். இருந்தாலும் பொறுமையாக கோபத்தை அடக்கி பணியைச் செய்து விடுவார்.

இதற்கிடையில் ஓய்வு நேரத்தில் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்து பட்டதாரி ஆனார்.

கருணாகரன் சிறிது நாட்களில் வேறு துறைக்கு மாறுதல் ஆனதும் சண்முகம் அவர்கள் மனைவி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. இஷ்டத்திற்கு வெளியே குப்பையைக் கொட்டினார்.

வருடங்கள் உருள, கருணாகரன் பொதுப் பணித்துறையில் கிளார்க்காக பணியில் சேர்ந்தார். இது பற்றி கருணாகரன் பெற்றோர் அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை எனலாம். அன்று கருணாகரன் கைப்பேசித் தொடர்பில் வந்த சண்முகம் அவர்கள் என்னப்பா, எப்படியிருக்கிறாய் என வினவினார்.

கருணாகரன் தான் பொதுப் பணித்துறையில் கரூரில் பணி செய்வதாகக் கூறினார். மேலும் தான் பட்டப்படிப்பு முடித்து விட்டதாகவும் கூற சண்முகம் அவர்கள் மனமாரப் பாராட்டினார்.

இன்று கருணாகரன் அலுவலகம் வந்த சண்முகம் அவர்கள் கருணாகரனைப் பாராட்டி விட்டு சிறிது நேரம் பேசி விட்டு வருகிறேன் என்றார். ஊரில் அதே வீட்டில் தானே அப்பா அம்மா உள்ளார்கள் என சண்முகம் கேட்க ஆமாம் என்று கருணாகரன் கூறினார்.

கருணாகரன் ஊர் வந்த சண்முகம் அவர்கள் கருணாகரன் பெற்றோர் இல்லம் வந்தார். கருணாகரன் பெற்றோர் அவரை இன்முகத்துடன் வரவேற்று நிறைய சமாச்சாரங் களைப் பேசினார்கள். கருணாகரன் அப்பா சரி இனிமேல் ஒப்பந்தத்தை நிறைவேற்றலாமா என கேட்க சண்முகம் அவர்கள் சற்று மிரண்டு என்ன ஒப்பந்தம் எனக் கேட்க உங்கள் மகளுக்கும் எனது மகனுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் என கருணாகரன் அப்பா கூறினார்.

சண்முகம் அவர்கள் மீண்டும் என்னவென்று அதிர்ச்சியில் கேட்க உங்கள் மகள் தான் கருணாகரனைத் தூண்டிப் படிக்க வைத்தார்கள்.

மகனுக்கு பட்டப் படிப்பில் தேர்வை எதிர் கொள்ள நிறைய உதவினார்கள். என் மகன் பட்டப் படிப்பு முடித்து அரசாங்க வேலையில் சேர்ந்ததும் நமது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஒப்பந்தம் தான் எனக் கூற சண்முகம் ஏதுமே அறியாமல் நடந்திருக்கே என மனதிற்குள் கூறிக் கொண்டார்.

கருணாகரன் அப்பாவைப் பார்த்து சரி செய்யலாம். ஆனால் என் மனைவி என்று இழுத்தார்.

உங்கள் மகள் மற்றும் அம்மாவிடம் ஏற்கனவே இது பற்றி ஒப்பந்தம் ஆயாச்சு எனக் கூறினார் சண்முகம்.

ஒன்றுமே தெரியாமல் இருந்து விட்டோமோ என மனதிற்குள் பொருமிய சண்முகம் அவர்கள் கருணாகரன் அப்பாவிடம் சரி சம்மந்தி நமக்குள் இந்த திருமண ஏற்பாடு இப்போது ஒப்பந்தமாகக் கொள்ளலாமெனக் கூற கருணாகரன் அப்பா இத்துடன் இந்த ஒப்பந்த விளையாட்டை முடித்துக் கொள்வோம். மணமேடை நம்மை அழைக்கிறது என்றதும் சண்முகம் தன்னையறியாமல் சிரித்தார்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *