அத்தனை துயரங்களையும் அவள் அன்பு துடைத்தெறிந்தது. அத்தனை வெறுப்புகளையும் அவள் பாசம் அறுத்தெறிந்தது. இத்தனை நாள் இந்த விஷ விருட்சத்தை வளர விட்டிருந்தது அவன் தவறு தான் .அவளைப் பார்க்காமல் இருந்திருந்தால், இந்த உலகம் சூனியமாகத்தான் இருந்திருக்கும் .அவளைப் பார்த்த பிறகு தான், இந்த பூமிப் பந்து பூப்பந்து போல இருந்தது என்று நினைத்தான் முத்தமிழ்.
காதல் என்பது எப்படி வரும்? எப்போது வரும் ? எங்கிருந்து வரும்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அது காற்றைப் போல பூ மலர்வதைப் போல மழைத்துளியைப் போல மலர்ந்து விடுகிறது. அது கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டும், விவரம் கேட்டுக் கொண்டும் வருவதில்லை இதயம் என்ன சொல்கிறதோ அதைத் தான் செய்கிறது மனது.
முத்தமிழுக்குள் தேன்மொழி அவன் இதயத்திற்குள் விழுந்தது தப்பில்லை. அதை மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் விழி பிதுங்கி நின்றான். அவள் ஒரு கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவதை. அந்தக் கட்டுக்களை உடைத்துக் கொண்டு அவளைக் கைப் பிடிப்பது என்பது அவ்வளவு சாத்தியமில்லை தான் பார்ப்பது மட்டுமே போதும் என்றால் அவன் காதல் இலக்கிய காதலை விட இன்னும் ஒரு படி மேல். கை சேர்வது என்பது கரை சேராத கப்பலை போல. இந்த இறுக்கத்தின் தூரம் எவ்வளவு என்று முத்தமிழுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.அவளைப் பார்ப்பதும் பேசுவதும் எப்போது என்று நினைத்துக் கொண்டிருந்தான். அந்த ஒரு நாள் வந்தது .அது ஓர் உணவகம் இருவரும் அருகருகே .இன்று அவளுடன் பேசி விடலாமா? நம் மனதில் இருப்பதைச் சொல்லி விடலாமா? என்று தவிப்போடும் ஏக்கத்தோடும் இருந்தான் முத்தமிழ்.
தொடும் தூரத்தில் இருந்தவளைத் தொட்டுப் பேசுவதற்கு உரிமை இல்லை. அருகில் இருப்பவளோடு சிரித்துப் பேசுவதற்கும் அவள் தெரிந்தவள் இல்லை. நாம் ஏதாவது கேட்டு ஏதாவது ஒன்று நடந்து விட்டால்? என்ன செய்வது ? அவள் அழகை விட அவளின் உள்ளம் அழகானது .அவளை நெடுங்காலமாகப் பின் தொடர்ந்த பின் தான் அவளைக் காதலிப்பது என்று முடிவு செய்தான் முத்தமிழ். ஆனால் தொண்டை வரை வந்த வார்த்தை உதடுகளுக்கு வரும்போது உதிர்ந்து விட்டது. இப்படியே அவனின் காதல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் அவனுடைய செல்கள் எல்லாம் தர்ணா செய்ய ஆரம்பித்திருந்தன. ஒன்று அவளை காதலிப்பதை நாம் சொல்லிவிட வேண்டும். சொன்ன பிறகு அது இல்லை என்றோ ? சரி என்றோ சொல்வது அவளின் விருப்பம். ஆனால் சொல்லி விடுவது தான் சிறந்தது என்று நினைத்தான் முத்தமிழ் .
மொத்த ஆசைகளையும் திரட்டி ஒற்றை வார்த்தையாய் வடிவமைத்து சொல்லிவிடலாம் என்று தைரியத்தை வரவழைத்து அக்கம் பக்கம் இருக்கிறவர்கள் தெரிந்தவர்களா ? நாம் ஏதாவது ஒன்று கேட்டு அவள் ஏதாவது ஒன்று சொல்லிவிட்டால் என்ன செய்வது ? நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விட்டால் நம்மை அசிங்கமாக நினைப்பார்களே ?என்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு பேசி விடலாம் என்று நினைத்தான் முத்தமிழ்.
அவன் பேசுவதற்கு ஒத்திகை பார்த்து உதடு குவித்த போது தேன்மொழியின் அருகில் வந்து அமர்ந்தான் ஒருவன். அதுவரை அவளை இதயத்தில் சுமந்திருந்தவன் இப்போது அருகில் ஒருவன் அமர்ந்ததை பார்த்ததும் கண்களின் வழியே கண்ணீராய் கக்கினான்.
என்ன இது? என் தேவதையின் அருகில் இன்னொரு ஆணா? நாம் பின்தங்கி விட்டோமா ? இந்தப் பிறப்பு அவளுக்குத்தான் என்று நினைத்தேனே? ஆனால் ஏற்கனவே அவளுக்கு ஜோடி இருக்கிறதா? முன்னரே நான் இதை அவளிடம் சொல்லி இருக்க வேண்டுமோ? காலங்களை நாம் தான் கடத்தி விட்டோம் ?என்று அருகில் இருந்து அழுது கொண்டிருந்தான் முத்தமிழ்.
ஆனால் அவள் அவனோடு சிரித்துச் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். இதயம் இல்லாத ஒருத்தியைக் காதலிப்பதும் தன்னைப் பற்றியான சிந்தனையில்லாத ஒருத்தியைத் தன் இதயத்தில் தூக்கிச் சுமப்பதும் தவறான விஷயம் என்று அவன் மூளைக்கு அப்போது தான் எட்டியது.
அதுவரை அவன் உயிருக்குள் அவளுக்காக கோயில் கட்டி கும்பாபிஷேகமே செய்திருந்தான்.
ஆனால் இன்று அவளுக்கு வேறொருவன் இருக்கிறான் என்பது தெரிந்ததும் அவனுடைய எண்ணங்கள் எல்லாம் சுக்குநூறாக உடைந்து சிதறின. இனி என்ன செய்வது ? சாத்தியப்படுவது சாத்தியமற்றது ? இனி தான் நம் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கிடைக்காத ஒன்றுக்காக ஏங்குவது. கிடைக்கக் கூடாது என்று தெரிந்தும் மனதை இழப்பது முட்டாள்தனமானது. நாம் தான் காதலிக்கிறோம் .ஆனால் அவள் நம்மை காதலிக்கவில்லையே?
நாம் ஏன் அவளைக் காதலிக்க வேண்டும். காதலிக்காத ஒருத்தியை நாம் ஏன் இதயத்தில் சுமக்க வேண்டும். இரக்கமற்றவளை என்ன செய்வது? என்று நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் முத்தமிழ்.
அவன் கண்களில் வழிந்தோடும் கண்ணீருக்கு அளவில்லை. அது நயாகரா நீர்வீழ்ச்சி போல் அவன் இதயத்தை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த உணவகத்தில் இருந்த சிப்பந்தி,
” சாருக்கு ஒரு ஒன் சைடு ஆம்லெட்” என்று சத்தமாகக் கத்தினான்.
” நமக்கு எல்லாமே ஒன் சைடு தான் போல” என்று நினைத்து அவனுக்குள்ளே சிரித்துக் கொண்டான் முத்தமிழ்.
#சிறுகதை #தமிழ் சிறுகதை #shortstories in Tamil #Tamil shortstories