டெல்லி, ஜூலை 23–
2024–25 க்கான ஒன்றிய பட்ஜெட்டில் ஆந்திர மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
பீகார், ஆந்திராவுக்கு திட்டம்
இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில்,
பீகாரில் உள்ள பீர்பைண்டியில் ரூ.21,400 கோடி செலவில் 2400 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் கட்டப்படும்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மூலதனத்தின் தேவையை உணர்ந்து, சிறப்பு நிதி உதவியை எளிதாக்குவோம். நடப்பு நிதியாண்டில், கூடுதல் தொகையுடன் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியான போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை விரைவாக முடிக்கவும், நிதியுதவி செய்யவும் எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.