டெல்லி, ஜூலை 12–
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ அமைப்பு இயங்குகிறது என்று உச்சநீதிமன்றம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை தங்கள் அரசியல் கட்சியின் அமைப்பாக நினைத்து, எதிர்க்கட்சியினர் மேல் நடவடிக்கை எடுக்க மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இதனால் பாஜக தொடர்ந்து அரசியல் ரீதியாக பயனடைந்து வருகிறது.
இதனால் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு தொடர தடை விதிக்கும் சட்டத்தை மேற்கு வங்கம் இயற்றியது. ஆனால், அத்தனையும் மீறி மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வந்தது. இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சிபிஐ எதிர்ப்பு
ஆனால், இதனை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என ஒன்றிய அரசு முறையிட்ட நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு தொடர தடை விதிக்கும் சட்டத்தை இயற்றிய பிறகும் சிபிஐ வழக்கு பதிவு செய்வதை எதிர்த்து மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கை விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் ஒன்றிய அரசை இணைக்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐ சுதந்திரமாக செயல்படும் நிறுவனம் என்றும், இதனால் தங்களை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை இந்த வழக்கில் இணைக்கக்கூடாது என சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சிபிஐயை உருவாக்கிய டெல்லி சிறப்பு காவல்துறை சட்டத்தை உருவாக்கியதே ஒன்றிய அரசுதான். ஒன்றிய அரசால் குற்றங்கள் என அறிவிக்கப்பட்ட செயல்களை மட்டுதான் சிபிஐயால் விசாரிக்க முடியும் என்ற நிலையில், அதன் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ இயங்குகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஒன்றிய அரசையும் இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.