கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
பிரயாக்ராஜ், பிப். 25–
ஒன்றரை மாதமாக விமரிசையாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, நாளையுடன் நிறைவடைகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மிகப் பெரிய ஆன்மிக–கலாச்சார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சிக்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சாத்துக்கள், ரிஷிகள் புனித நீராடி வருகின்றனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுவரை 63 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
மகா சிவராத்திரி நாளான நாரளை (26ம் தேதி) நடைபெறும் இறுதி புனித நீராடலுடன் இந்த விழா நிறைவுபெறவுள்ளதால் அதிகளவிலான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனர். நாளை உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மகா கும்பமேளா சிறப்பு டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறும்போது திரிவேணி சங்கமத்தில் 24ம் தேதி (நேற்று) ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். நிறைவு நாளான நாளை கும்பமேளாவில் அதிக அளவிலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று மாலை 4 மணி முதல் பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். பால், காய்கறிகள், மருந்துகள், எரிபொருள் மற்றும் அவசரகால வாகனங்கள் போக்குவரத்து தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், பிரயாக்ராஜில் பக்தர்கள் எந்த வழித்தடத்தில் நுழைகிறார்களோ, அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலேயே புனித நீராட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி தாம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரெயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், பிரயாக்ராஜில் புனித நீராடிவிட்டு அயோத்தி செல்லும் பக்தர்கள் அதிகரித்து வரும் நிலையில் அயோத்தியிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.