தலையங்கம்
வங்கதேசத்தின் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து செயல்படும் பல விஷயங்களை ஒவ்வொன்றாக வலியுறுத்தியுள்ளார். பிரதம் ஆலோ என்ற வங்கதேச ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், வங்கதேசம் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் உள்நாட்டு சிக்கல்களில் இந்தியாவை சார்ந்து இருப்பதையும், அதே நேரத்தில் இந்தியாவும் வங்கதேசத்தின் சேவைகளிலிருந்து பலன்களைப் பெறுவதையும் குறிப்பிட்டார்.
வங்கதேசம் தனது 94 சதவீத சர்வதேச எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவும் வங்கதேசமும் 4,367 கிலோமீட்டர் நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லையில் நீர் பகிர்மானம், வர்த்தகம் மற்றும் அகதிகள் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. ஜெனரல் ஜமான், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு சமத்துவத்தையும் நேர்மையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.அதாவது வங்கதேசம் கிட்டத்தட்ட எல்லா பக்கங்களில் இருந்தும் இந்தியாவால் சூழப்பட்டுள்ளது
ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் இந்தியாவும் வங்கதேசமும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட்டன. ஆனால் சமீபத்தில் வங்கதேசம் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருக்கமாக செயல்படுவதால், இந்தியாவின் கவலை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு வங்கதேசம் பல்வகையான போக்குவரத்து வசதிகளை வழங்கி வருகிறது. இந்த இணைப்புகள் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கும் பொருளாதாரத்திற்கும் ஆதரவாக உள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பில் வங்கதேசத்தின் ஒத்துழைப்பு முக்கியமானது. ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் இந்தியா இந்த விஷயத்தில் (பாதுகாப்பு) உதவிகளைப் பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் உறவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சமத்துவம் மற்றும் நேர்மையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவும் வங்கதேசமும் இடையிலான உறவு சமநிலையைப் பேண வேண்டும்” என்றார் ஜெனரல் ஜமான். அதேசமயம், வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மை இந்தியாவுக்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.
வங்கதேசம், இந்தியா இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எரிசக்தி, நதிநீர் பகிர்வு, மின்சாரம், வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இரு நாடுகளின் மக்கள் பலன் அடையும் இந்த திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவது மிக அவசியமாகும்.