தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு
புதுடெல்லி, ஜூலை 6-
ஒத்திவைக்கப்பட்டிருந்த முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11ம் தேதி நடத்தப்படும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. இதைப்போல முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் மே மாதம் நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடந்தது அம்பலமானது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், கோர்ட்டுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு இளநிலை நீட் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தேர்வை கடைசி நேரத்தில் மத்திய அரசு ஒத்திவைத்தது. இது மருத்துவ மேற்படிப்புக்காக தயாராகி வந்த மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
மறுபுறம் இந்த தேர்வை எந்தவித சர்ச்சைகளும் இன்றி நடத்துவது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. குறிப்பாக மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம், தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் சைபர் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விவாதித்து வந்தனர்.
இதில் ஒட்டுமொத்த தேர்வு முறையையே ஆய்வுக்கு உட்படுத்திய அதிகாரிகள், எந்தவித முறைகேடுக்கும் வழியின்றி தேர்வுகளை நடத்தி முடிப்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது முதுநிலை நீட் தேர்வை நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். இதற்காக புதிய தேதி நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11ம் தேதி இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடத்தப்படும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் செய்து வருகிறது. இந்த தேர்வை நடத்துவதற்கு டி.சி.எஸ். நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.