சினிமா

‘ஒதுக்காதே; ஒதுங்காதே’: இளைய தலைமுறைக்கு சரத்குமார் அழைப்பு

Spread the love

ஜெயலலிதாவை எதிர்த்தேன்; என்னை எம்.எல்.ஏ.வாக்கி அழகு பார்த்தார்

பொன்மனச் செம்மலின் தீவிர பக்தன் நான்; கலைஞரின் ஆளுமையைப் பாடம் படித்தேன்

 * மகள் வரலட்சுமியின் ‘வில்’ பவர்

 * விஷால் விவகாரம்: நடந்தது என்ன?

 * 60லும் 20: இளமையின் ரகசியம்

சினிமா + அரசியல் என்ற இரட்டைக் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த சரத்குமார், நடிப்பு என்னும் குதிரைக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகி இருக்கிறார். டைரக்டர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் சரத்குமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனைவி ராதிகாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மகள் வரலட்சுமி, மனைவி ராதிகா இவர்களோடு ஒரு படத்தில் இணைந்திருக்கிறார். இப்படி… கைவசம் அரை டஜன் படங்களை வைத்து சினிமாவிலும் மும்முரம் ஆகியிருக்கும் நடிகர் சரத்குமார், தன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்துவதற்கும், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் பணத்துக்காகவே மீண்டும் புதுப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அன்று கண்ட மேனிக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அதே ஆஜானுபாகு தோற்றத்தில் இருக்கும் சரத்குமார் இப்போது கருகரு தாடி மீசை சுருள்முடியுடன் காட்சி தருகிறார்.

அறுபதிலும் இருபது போல் தோற்றமளிக்கும் இளமையின் ரகசியம் என்ன, மகள் வரலட்சுமியின் வில் பவர் தில் பவர் எப்படி, நடிகர் சங்க விஷால் விவகாரத்தில் நடந்தது என்ன?… இப்படி பல கேள்விகளுக்கு சுடச்சுட சரத்குமார் பதிலளித்தார்.

* புரட்சித்தலைவி ஜெயலலிதாவை கண்மூடித்தனமாக எதிர்த்தேன்; ஆனால் அவரும் என்னை எம்எல்ஏவாக்கி அழகு பார்த்தார்.

* பொன்மனச் செம்மலின் தீவிர பக்தன் நான், அதே நேரத்தில் கலைஞரின் ஆளுமையில் பாடம் படித்தேன் என்று மனம் திறந்தார்.

அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும், அதிலும் குறிப்பாக படித்து பட்டம் பெற்றிருக்கும் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அரசியலுக்கு என்று சிலர் இருக்கிறார்கள் என்று மனம்போக்கில் இருந்து விடக்கூடாது; இளைய தலைமுறையினர் ஒதுங்கவும் வேண்டாம்; அரசியலை ஒதுக்கவும் வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தியாகராயநகர் ராமகிருஷ்ணா தெருவில் தன் அகில இந்திய சமத்துவ கட்சி அலுவலகத்தில் அவருடன் ஓர் கலந்துரையாடல்.

‘மக்கள் குரல்’ பத்திரிகையின் மூத்த துணை ஆசிரியர் வீ.ராம்ஜீ தலைமையில் ‘மக்கள் குரல்’ மற்றும் ‘டிரினிட்டி மிரர்’ பத்திரிகையின் செய்தியாளர்கள் பிரீத்தி ஜெயராமன், சுப்ரிஜா சிவக்குமார், சரண்யா ராஜகுரு, அபிநயா கண்ணன் ஆகியோர் பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரிடம் நேர்காணல் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:-

கேள்வி: இப்போது வரை உங்களது ஃபிட்னஸ் ரகசியம் என்ன?

பதில்: அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் எதையும் சாதிக்க கூடிய சக்தியும் வல்லமையும் நமக்கு வரும் என்பதே எனது முதல் தாரக மந்திரம்.

எனது அப்பா ஒரு ‘ஸ்போர்ட்ஸ் பெர்சன்’ (விளையாட்டு வீரர்). அவர் எங்களை ஸ்போர்ட்சில் பங்குபெற வைத்து ஊக்கப்படுத்தினார். இதன்மூலம் அவர் ‘ஹெல்த் இஸ் வெல்த்’ என்ற உண்மையை எங்களுக்கு உணர்த்தினார்.

சுவர் இருந்தால் தான் சித்திரம்

நான் 45 ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து வருகிறேன். ஒரு வருடத்தில் 40 நாட்கள் மட்டுமே ஒரு சில காரணங்களால் அதனைத் தவிர்த்திருக்கிறேன். எனக்கு ‘ஜிம்’முக்குப் போகும் பழக்கம் உள்ளது. அங்கு போக முடியாத சூழ்நிலை இருந்தால் கூட ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, ஈ.சி.ஆர். போன்ற இடங்களில் உள்ள ‘ஜிம்’முக்குச் செல்வேன். எனது வீட்டில் உள்ள ‘ஜிம்’மிலும் உடற்பயிற்சி செய்வேன். ‘ஜிம்’முக்குச் செல்வது எனக்கு டீ. காபி போன்று பழக்கமாகிவிட்டது.

சுவர் இருந்தால்தான் சித்திரம் என்ற பழமொழிக்கு ஏற்ப உடற்பயிற்சி, உடற்கட்டு இருந்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

கேள்வி: வரலட்சுமியுடன் நீங்கள் படம் பண்ணுவது எப்போது?

பதில்: ராடான் தயாரிப்பில் நான், எனது மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி முன்று பேரும் சேர்ந்து ‘பிறந்தாள் பராசக்தி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறோம். இந்த (ஜனவரி) மாதத்தின் இறுதி அல்லது பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நான் பிறந்த ஜூலையில் இப்படம் ரிலீசாகலாம்.

கேள்வி: நீங்கள் நடிக்கும் பிற படங்கள்…?

பதில்: வானம் கொட்டட்டும் திரைப்படம் முடிந்துவிட்டது. இப்படம் அடுத்த (பிப்ரவரி) மாதத்தில் ரிலீசாக இருக்கிறது. நானும் சசிகுமாரும் நடிக்கும் ‘நானா’ படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். அது பற்றி அந்தத்திரைப்படத்தைப் பற்றி மணிரத்தினம் கூறுவார்.

கேள்வி: நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற கதையம்சம் உள்ள படங்கள் உங்களுக்கு வராமல் இருப்பதற்கான காரணம்?

பதில்: மக்களுடைய ரசனை மாறிவிட்டது. இப்படி இருக்கும்போது என்ன மதிரியான கதை சொல்வது என்பது பலருக்கும் குழப்பமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த மாதிரியான படங்கள் ஓடுமா? என்பது கூட தெரியவில்லை. அதனால்தான் நாட்டாமை, சூரியவம்சம் ஆகிய படங்கள் மாதிரி வரும் வானம் கொட்டட்டும், பிறந்தாள் பராசக்தி, இரண்டாவது ஆட்டம் போன்ற படங்களில் நடிக்கிறேன்.

இன்டர்நெட்டில் படம்

கேள்வி: இப்போது இண்டர்நெட்டிலேயே மக்கள் திரைப்படங்களைப் பார்த்து விடுகிறார்களே?

பதில்: இதுவரை மக்கள் அதிகமாக தியேட்டருக்குச் சென்று பார்த்திருக்கும் படம் என்றால் அது சூரியவம்சம் தான் என்று சமீபத்தில் நடந்த ‘சர்வே’-யில் தெரியவந்துள்ளது. இப்போது மக்கள் தியேட்டருக்குப் போய் பார்க்காமல் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் போன்றவற்றிலேயே திரைப்படங்களைப் பார்த்து விடுகிறார்கள். பாகுபலியை விட இரண்டு மடங்காக மக்கள் தியேட்டருக்குச் சென்று சூரிய வம்சம் படத்தைப் பார்த்துள்ளார்கள். அப்படி இருக்கையில், இப்போது எந்த அளவுக்கு மக்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை. வரும் காலங்களில் தியேட்டருக்குச் செல்வார்களா என்பதே எனக்கு தெரியவில்லை. அதனால் தான் இப்போது நட்சத்திரங்கள் ‘வெப் சீரீஸ்’-க்கு நடிக்கச் செல்கிறார்கள்.

* * *

பி டி த் த வா ச க ம்

மாற்றம் என்பது மானிடத் தத்துவம், மாறும் உலகில் மகத்துவம் அறிவேன் தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!

* * * 

வெப் சீரீஸ் படம்

கேள்வி: நீங்கள் ‘வெப் சீரீசில்’ நடிக்கிறீர்களா?

பதில்: ஆந்திராவில் ஆரம்பமாக இருக்கும் ஒரு வெப் சீரீசில் ‘செல்லா கூப்ஸ்’ மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன்.

கேள்வி: ‘வெப் சீரீஸ்’-க்கு சென்சார் இல்லையே?

பதில்: எது நல்லது எது கெட்டது? என்று யார் முடிவு செய்வார்கள்? அதில் எது நமக்குத் தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். தேவையில்லாததை ஒதுக்கிவிட்டுப் பார்ப்பதுதான் நல்லது.

கேள்வி: உங்களைப் பற்றி வதந்தி பரவி, அது உங்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கிறதா?

பதில்: என்னைப் பற்றி வதந்தி வந்தது கிடையாது. என்னைப் பற்றிய உண்மைதான் வந்திருக்கிறது. சரத்குமார் ஒரு ஹீரோயினை காதலிக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது என்றால் அது உண்மைதான். அது வதந்தி கிடையாது. உண்மையை ஒத்துக் கொள்பவன் நான். அதனால்தான் என்னைப் பற்றி வதந்தி வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. எனவே நான் எந்த காலக்கட்டத்தில் யாரைக் காதலித்தேன் என்று உலகிற்கே தெரியும். அது ராதிகாவுக்கும் தெரியும்.

கேள்வி: வரலட்சுமி நடித்ததில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது?

அரசியலில் வரலட்சுமி…?

பதில்: ‘தாரதப்பட்டை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘போடா போடி’ படத்திலும் ஒரு இளம் பெண்ணாக இருந்த அவர் அம்மா வேடத்தில் அருமையாக நடித்திருந்தார். அவரது நடிப்பை நான் பாராட்டியிருக்கிறேன். சில அறிவுரைகளையும் அவருக்கு கூறியிருக்கிறேன்.

கேள்வி: வரலட்சுமி அரசியலுக்கு வருவதாகச் சொல்கிறாரே?

பதில்: எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும். யாரையுமே நான் வர வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வந்தவுடனேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

கேள்வி: அரசியலில் உங்கள் எதிர்க்கட்சியில் இணைந்து வரலட்சுமி செயல்பட்டால்?

பதில்: அது அவருடைய விருப்பம்.

கேள்வி: அரசியல் குறித்து நீங்கள் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது?

பதில்: அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். எல்லோரும் அரசியலில்தான் இருக்கிறார்கள். (ஒதுங்காதே, ஒதுக்காதே என்பது தான்) ஒரு சின்ன தேவைக்காக கூட அரசையே நாட வேண்டிய சூழல் உள்ளது. எடுத்துக்காட்டாக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் ‘போலீஸ் வெரிஃபிகேஷன்’-க்காக மாநில அரசையும் ‘பாஸ்போர்ட்’-க்காக மத்திய அரசையும் நாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்.

கேள்வி: அரசியல் பற்றிய புரிதல் எப்படி இருக்கிறது?

பதில்: படிப்பறிவு உள்ளவர்கள் அரசியலை விட்டு விலகி நிற்கிறார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் அரசியலில் பதவியில் இருக்கிறார்கள்.

ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் மட்டும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள். அன்றாட வாழ்க்கையில் என்ன குறையைச் சொல்கிறார்கள்? மாணவர்கள் படிக்கிறார்கள். மற்றவர்கள் வேலையைச் செய்கிறார்கள். ஒருசிலர் எதற்கு தேவையில்லாத வேலை என்று நினைப்பார்கள். தங்கள் வேலையையும் பார்த்துக் கொண்டு மக்களுக்குப் பொதுநல சேவையையும் செய்ய வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் முழுமையாக படித்தேன்

இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்கிறார்கள். அச்சட்டத்தை நான் முழுமையாக படித்தேன். அதில் இஸ்லாமிய சகோதரகள் நாட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதனை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதிக்குப் பிறகு பிறந்த அனைவரும் இந்தியக் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது நீங்கள் பிறந்திருந்தால் நீங்கள் குடிமகன்தானே?. பின்னர் எப்படி உங்களை வெளியே அனுப்புவார்கள்? ஒரு புரிதல் இல்லாமல் ஏன் போராட வேண்டும்?. பிறப்புச் சான்றிதழ் என்பது அனைவருக்கும் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும் கூட உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்கள் நிங்கள் 50 ஆண்டுகளாக இங்கேதான் இருந்தீர்கள் என்று சொல்வார்கள் அல்லவா?.

இதெல்லாம் மீறி அவர்கள் உங்களை அடித்துத் துரத்துவார்கள் என்றால் உங்களுக்காக நான் கண்டிப்பாக போராடுவேன். இந்த மாதிரியான விஷயங்களுக்குப் புரிதல் இல்லாமல் போராடக் கூடாது.

ஜெயலலிதா: மறக்க முடியாது

கேள்வி: ஜெயலலிதாவுடன் வேலை பார்த்ததில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம்?

பதில்: எதையுமே என்னால் மறக்க முடியாது. 1996ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக 40 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன். அப்போது எனது வீட்டில் கல் எறிந்தார்கள். அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யக் கூடாது என்று எனக்கு கொலை மிரட்டல் கூட வந்தது. அதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை.

எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்

அப்படி இருக்கையில் அந்த தலைவர்களே என்னை எம்.எல்.ஏவாக்கி அழகு பார்த்தார்கள். நான் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர். கலைஞர் கருணாநிதியிடம் அவருடைய ஆளுமைத் தன்மை, அறிவு, ஆற்றல் திறமை போன்ற நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டேன். இந்த இரண்டு பேரிடமும் பயணித்த அனுபவத்தை எனது பொது வாழ்வில் பயன்படுத்தி வருகிறேன்.

கேள்வி: உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம்?

பதில்: உண்மை. நான் எப்போதும் உண்மையையே பேசுவேன். உண்மையை தைரியமாக, உரக்கப் பேசுவேன். அதுவே என்னிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். சமூக ஊடங்களில் யார் என்னைத் திட்டினாலும் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.

என் முதல் ஹீரோ என் அப்பா தான்…

கேள்வி: உங்களுடைய முதல் ஹீரோ யார்?

பதில்: என்னுடைய முதல் ஹீரோ எனது அப்பாதான். பின் புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி. இவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டேன். நான் ஒபாமாவின் மிகப் பெரிய ரசிகர்.

கேள்வி: நீங்கள் பத்திரிகையாளரானது எப்படி?

மோடி பேட்டி

பதில்: பி.எஸ்சி (கணிதம்) படித்த நான் முதலில் சைக்கிளில் சென்று பேப்பர் போடுவேன். பின் பிரபல நாளிதழுக்கு செய்திகளைக் கொடுத்தேன். அதற்கு விளம்பரங்கள் வாங்கிக் கொடுத்தேன். பின்னர் பத்திரிகையாளரானேன். நான் மீடியாவில் இருக்கும்போது பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில் அகமதாபாத்தில் அவரை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்தேன்.

விஷாலுக்கு பதிலடி இல்லை…

கேள்வி: நடிகர் சங்கப் பிரச்சனையின்போது விஷால் கூறியதற்கு நீங்கள் பதிலடி கொடுக்காதது ஏன்?

பதில்: என்னைப் பொறுத்தவரைக்கும் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எண்ணெய் ஊற்றி நெருப்பை எரிய விடக் கூடாது. நான் சங்கத்தைக் கடனில் இருந்து மீட்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்? அதற்காக என்ன செய்தேன்? என்று எனக்குத் தெரியும். அந்த நடிகர் சங்க பிரச்சனையை அன்றைக்குப் பெரிய விஷயமாகப் பேசியதை இப்போது எந்த மீடியாவும் பெரிதுபடுத்துவதில்லை. இதனால் மீடியா மீது எனக்கு கோபம் உள்ளது.

இவ்வாறு சரத்குமார் பேட்டியளித்தார். அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *