செய்திகள்

ஒட்டுக்கேட்கும் கருவிகள் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி: ராஷ்டிர சமிதி கட்சி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Makkal Kural Official

ஐதராபாத், மார்ச் 26–

தெலுங்கானாவில் முக்கிய நபர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், இதற்கான கருவிகளை இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கானாவில் இதற்கு முன்பு சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது, மாநில காவல்துறையினர் பல்வேறு முக்கிய நபர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்படி தெலுங்கானாவின் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு தொழிலதிபர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், இதற்கான உபகரணங்கள் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவ்வாறு ஒட்டுக்கேட்கப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் பி.ஆர்.எஸ். கட்சிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பி.ஆர்.எஸ். தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது அமெரிக்காவில் உள்ள மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பிரபாகர் ராவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சட்டவிரோத கண்காணிப்பு மற்றும் ஆதாரங்கள் அழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஜங்க ராவ் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருப்பத்தண்ணா ஆகிய 2 மூத்த அதிகாரிகளும் ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறியுள்ளது.

தெலுங்கானாவில் முந்தைய பி.ஆர்.எஸ். அரசாங்கத்தின் கீழ் மாநில புலனாய்வு பணியகத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த ரவி பால் என்பவர், அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டியின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்காக அவரது வீட்டிற்கு அருகில் தொலைபேசி ஒட்டுக்கேட்கும் கருவிகளை அமைக்க உதவியதாகக் கூறப்படுகிறது.

இந்த கருவிகள் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இவற்றின் மூலம் 300 மீட்டர் எல்லைக்குள் பேசப்படும் எந்த தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டுக்கேட்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இறக்குமதிக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ரவி பாலிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

அதோடு தெலுங்கு டிவி சேனல் ஒன்றை நடத்தி வரும் ஷர்வன் ராவ் மற்றும் காவல்துறையின் நகரப் பணிக்குழு அதிகாரி ராதா கிஷன் ராவ் ஆகியோருக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *