பாலசோர், ஜூன்.4-
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த பயங்கர ரெயில் விபத்து உலகையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். 280-க்கும் மேற்பட்டவர்கள் பலியான அந்த பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேல் இருந்து, அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்த விபத்து ஏற்படுத்தியுள்ள வலியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த சூழலில் இருந்து மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வலிமை தரட்டும்.
இந்த விவகாரத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துள்ளது. இந்த ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்ப முடியாது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பேரிடர் குறித்து விரைவான விசாரணை நடத்த தகுந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
விபத்தில் பறிபோன உயிர்களை மீண்டும் கொண்டுவர முடியாது. ஆனால் அவர்களது குடும்பத்துக்கு அரசு ஆதரவாக இருக்கும். காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் தகுந்த சிகிச்சை வழங்கப்படும்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதைப்போல மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்ட ஒடிசா அரசுக்கும் பாராட்டுகள்.
இந்த விபத்து ஒரு பாடமாக அமைந்துள்ளது. வரும் காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ரெயில் விபத்து மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எடுத்து கூறினார்.
பின்னர் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் நிலைமையை ஆய்வு செய்தேன். என் சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். களத்தில் 24 மணி நேரமும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.