போஸ்டர் செய்தி

ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

புவனேஷ்வர், மே 6

பானி புயல் நிவாரண நிதியாக 1000 கோடி ரூபாய் ஒடிசா மாநிலத்திற்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புயல் பாதித்த பகுதிகளை அவர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

வங்க கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலத்தில் பூரி நகரின் அருகே கரையைக் கடந்தது.

அப்போது சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்தது. இதனால் ஒடிசாவில் 14 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயண பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன்னெச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

கோரதாண்டவம் ஆடிய இந்த பானி புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பலி எண்ணிக்கை மெல்ல, மெல்ல உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி 38 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இன்று காலை தனி விமானத்தில் சென்று ஆய்வு செய்தார்.அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஒடிசா கவர்னர் கணேசிலால், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வரவேற்றனர்.

பிறகு பிரதமர் மோடி தலைநகர் புவனேஷ்வரில் பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து ஆய்வு செய்தார். ஹெலிகாப்டரில் சென்றும் பார்த்தார்.

பிரதமர் மோடியிடம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளை விரைவாக நடத்தி முடிக்க கூடுதல் நிதி உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.

புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, ஒடிசா மாநிலத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஏற்கனவே, ரூ.381 கோடி வழங்கிய நிலையில், கூடுதலாக 1000 கோடி அளிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *