செய்திகள்

ஒடிசா அரசில் கேபினெட் அமைச்சர் அந்தஸ்தில் தமிழர் வி.கே.பாண்டியன்

புவனேஸ்வர், அக். 24–

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் முன்னாள் தனிச் செயலாளரான வி.கே.பாண்டியனுக்கு விருப்ப ஓய்வு கோரிக்கை வந்த ஒரு நாள் கழித்து, மாநில அரசில் கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வயது 49), 2000 ஆம் ஆண்டு பிரிவு ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002 ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும், அவரது வலது கரமாகவும் இருந்து வருகிறார்.

கேபினட் அந்தஸ்த்து பதவி

ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார். அக்டோபர் 20ஆம் தேதி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த அவருக்கு, நேற்று (அக்டோபர் 23 ந்தேதி) ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நவீன் பட்நாயக் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், விரைவில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், விஆர்எஸ் (விருப்ப ஓய்வு) எடுத்த ஒரு நாளிலேயே, ஒடிசா அரசில் கேபினட் அமைச்சர் பதவி வி.கே.பாண்டியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், ‘மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் அவர் களமிறங்கலாம் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் பலரும் கருதுகின்றனர். அண்மையில் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்த போது கூட மூன்றாவது நபராக பாண்டியன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *