* மீட்பு பணியில் இந்திய விமானப் படை தீவிரம்
* காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் 60 ஆம்புலன்ஸ்கள்
பாலசோர், ஜூன் 3–
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் 275 பேர் பலியாகி உள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி விரைந்தார்.
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. அதேபோல், பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் தண்டவாளத்தில் ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தவறுதலாக சென்றுள்ளது.
தவறான தண்டவாளத்தில் 127 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது. மேலும், இந்த ரெயிலின் சில பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக வந்துள்ளது.
அப்போது அந்த தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது அந்த ரெயில் மின்னல் வேகத்தில் மோதியது.
உடல்கள் சிதறி கிடந்தன
இந்த நிலையில் சில நிமிடங்களில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. எந்த பக்கம் திரும்பினாலும், அழு குரல்களும், உதவி கோரும் பயணிகளின் கதறலும் காண்போர் மனதை பதைபதைக்கச் செய்தது.
விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தண்டவாள பக்கவாட்டில் சிதறிக் கிடந்தன. படுகாயம் அடைந்தவர்கள் நகர முடியாமல் ரத்த வெள்ளத்தில் முனகியபடி கிடந்தனர். நொறுங்கிக் கிடந்த ரெயில் பெட்டிகளில் சிக்கி பலர் வெளியேற முடியாமல் கதறினர். காயங்களுடன் ரெயிலில் இருந்து வெளியேறியவர்கள் ரத்த வெள்ளத்தில், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பேர் உயிரிழந்ததாகவும், 900–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
இந்த விபத்தில் காயமடைந்த 900க்கும் மேற்பட்டவர்கள் பாலசோர், மயூர்பஞ்ச், பர்தக், ஜாஜ்பூர் கட்டாக் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் அதிக அளவு ரத்தம் வெளியேறி பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.
ரத்த தானம் செய்ய
மக்கள் ஆர்வம்
இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையறிந்த தன்னார்வலர்கள் பலர் நேற்றிரவே ஒடிசா சென்றனர். மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது வரை 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்துக்கு, ஒடிசாவின் சிறப்பு நிவாரண துறை செயலர் சத்யபிரதா சாஹு மற்றும் வருவாய் துறை அமைச்சர் பிரமிளா மாலிக் ஆகியோரை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அனுப்பிவைத்தார்.
தென்கிழக்கு ரெயில்வேயின் விபத்து மீட்பு ரெயில்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை மருத்துமனையில் சேர்க்கும் பணியில் 60 ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளன. அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா கூறுகையில், காயம் அடைந்த 132 பேர் அருகில் உள்ள சோரோ, கோபால்புர், கான்டாபாடா சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 47 பேர் பாலசோர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
விபத்து நடந்த இடத்தை மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
கோரமண்டல் ரெயிலில்
முன்பதிவு செய்த 869 பேர்
விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில், மொத்தம் 23 பெட்டிகள் இருந்தன. அவற்றில், 5 பெட்டிகள் தூங்கும் வசதியுடைய முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகள். 12 பெட்டிகள், ‘ஏசி’ வசதியுடையவை. இதுதவிர, முன் பதிவு செய்யப்படாத ஆறு பெட்டிகளும் இருந்தன. இந்த ரயிலில் பயணிக்க 869 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ரெயில், இன்று மாலை 4:50 மணிக்கு சென்னை வந்தடைய இருந்தது.
11 பெட்டிகள் தடம் புரண்டன
கோரமண்டல் ரெயிலின் என்ஜின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டதாக, ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோரமண்டல் ரெயிலின் என்ஜின் மற்றும் ஏ1, ஏ2, எச்1, பி2 முதல் பி9 வரையிலான பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
பெங்களூரு ரெயில்
பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து, ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரெயில் நேற்று முன்தினம் காலை 10.35 மணிக்கு புறப்பட்டது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் 994 பயணிகளும், முன்பதிவு செய்யாத இரண்டு பெட்டிகளில் 300 பேரும் பயணித்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்திய விமானப்படை
இந்நிலையில் சம்பவ இடத்தில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய விமானப் படை மீட்டது.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் கியாஸ் கட்டர்கள் மூலம் சேதம் அடைந்த ரெயில் பெட்டிகளை அறுத்து அதனுள் நுழைந்து யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதைத் தேடி வருகிறார்கள்.
விபத்துப் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு பகுதியையும் முற்றிலும் தேடி, அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்ய இன்னமும் 3 அல்லது 4 மணி நேரங்கள் ஆகும் என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.
பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 1,200 வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.