புரி, ஜூலை8-
ஒடிசாவில் உலக புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை நேற்று தொடங்கியது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தார்.
ஒடிசா மாநிலம் புரியில் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலக புகழ் பெற்றது.
புரி ஜெகநாதர் கோவிலில் இருந்து பகவான் ஜெகநாதர், பகவான் பாலபத்ரர் மற்றும் தேவி சுபத்திரை மூவரும் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலில் 9 நாட்கள் தங்குவதற்காக ஊர்வலமாக செல்வதை காண்பதற்காக இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
வழக்கமாக இந்த ரத யாத்திரை ஒரே நாளில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதைப்போல 53 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக புகழ்பெற்ற நேத்ரா உற்சவம், நபஜவுபன் தரிசனம் மற்றும் ரத யாத்திரை தொடக்க நிகழ்வு ஆகியவை ஒரே நாளில் நடந்தது. நேற்று அதிகாலையிலேயே இந்த சிறப்பு வழிபாடுகள் தொடங்கி நடந்தன.
பின்னர் கருவறையின் ரத்தின சிம்மாசனத்தில் இருந்து ஜெகநாதர், பாலபத்ரர், தேவி சுபத்திரை ஆகியோர் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட தங்கள் ரதங்களில் எழுந்தருளினர். சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த 16 சக்கரங்களை கொண்ட ரதத்தில் ஜெகநாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை தேரில் பாலபத்ரரும், 12 சக்கரங்களை கொண்ட சிவப்பு, கறுப்பு ரதத்தில் சுபத்திரையும் எழுந்தருளினர்.
பின்னர் கோவிலின் சிங்க வாசலில் இருந்து ரத யாத்திரை தொடங்கியது.
கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தார். இந்திய ஜனாதிபதி ஒருவர் புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இதைப்போல ஒடிசா கவர்னர் ரகுபர்தாஸ், முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உள்ளிட்டோரும் வடம் பிடித்து இழுத்தனர்.
வெகு விமரிசையாக நடந்த இந்த ரதயாத்திரையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஜெய் ஜெகநாத்’, ‘ஹரிபோல்’ என பக்தி கோஷங்களை எழுப்பி பரவசம் அடைந்தனர்.
சில நூறு மீட்டர் தூரத்துக்கு நடந்த ரத யாத்திரை பின்னர் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து இன்று மீண்டும் கிளம்பி குண்டிச்சா கோவிலுக்கு செல்கிறது.