பென்னாகரம், ஜூலை 31–
பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து படிப்படியாக சரியத் தொடங்கியது. பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 24 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தீடிரென கடுமையாக உயர்ந்து மாலை 80,000 கன அடியாக இருந்தது.
16 வது நாளாக தடை
இந்நிலையில் இன்று காலை 1 லட்சம் கன அடியாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 16-வது நாளாக தடை விதித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் இருந்து 2.5 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கனமழையும் பெய்தும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.