பரிசல் இயக்க தடை
மேட்டூர், டிச. 3–
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
பெஞ்ஜல் புயல் காரணமாக காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது.
நேற்று விநாடிக்கு நீர்வரத்து 7,414 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 110.93 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 9,246 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் அதிகரித்து 111.39 அடியாக இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் விநாடிக்கு 300 கன அடி நீர் வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.
இதேபோன்று காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், தமிழக கர்னாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 5,500 கன அடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரிசல் இயக்க தடை
நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவார் பானி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்குள்ள அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று முதல் தற்காலிக தடை விதித்துள்ளார்.தடை உத்தரவின் பெயரில் பிரதான அருவி செல்லும் நடைபாதை, சின்னாறு பரிசல் துறை ஆகியவை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.