செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்,ஆக. 27–

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு

60,000 கன அடி தண்ணீர்

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து வினாடிக்கு 60,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 37,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர்தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 43.47 டிஎம்சியாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.