தருமபுரி, ஆக. 23–
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், 39 நாட்களுக்கு பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் நீர்வரத்தும் அதிகமாக இருந்தது. குறிப்பாக கடந்த மாதம் கர்நாடகாவில் இருந்து உபரி நீர் திறப்பால் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலேயே இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பி இருந்தது.
சுற்றுலா தடைகள் நீக்கம்
இந்நிலையில் தொடர்ந்து காவிரியில் நீர் வரத்து குறைந்து வந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டிற்கான நீர்வரத்து 8,000 கன அடியாகச் சரிந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளான பிலிகுண்டலு, ஒகேனக்கலில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
முன்னதாக தொடர்ந்து சுற்றுலாப் பகுதியான ஒகேனக்கல் பகுதியில் அருவியில் குளிக்கவும் பரிசல்களில் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நீர்வரத்து குறைந்ததால் 39 நாட்களுக்கு பிறகு தற்பொழுது ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகளுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.