செய்திகள்

ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றிப்பார்க்க மட்டும் அனுமதி

தருமபுரி, செப். 27–

இன்று முதல் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சுற்றிப்பார்க்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் குளிக்க அனுமதி இல்லை என்றும் தர்மபுரி கலெக்டர் அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா பகுதிகளில் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொற்றுப் பரவல் குறைந்து வருவதையடுத்து சில இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்வு, நீர் வரத்து குறைவு காரணமாக உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

தடுப்பூசி கட்டாயம்

ஒகேனக்கல்லுக்கு வரும் பொதுமக்கள், மடம் செக்போஸ்ட், ஒகேனக்கல் பேருந்து நிலையம், ஆலம்பாடி செக்போஸ்ட் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சோதனை செய்யப்படுவார்கள். இங்கு வருகிற அனைத்து மக்களும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்.

ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர். மக்கள் அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி இல்லை. பரிசலில் சென்று சுற்றிப் பார்க்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *