செய்திகள்

ஐ.பி.எல்: சென்னை – டெல்லி அணிகள் இன்று மோதல்

மும்பை, ஏப்.10–

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

14வது ஐ.பி.எல். டி20 போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. போட்டியின் 2வது நாளான இன்று (சனிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் போனதுடன் 7வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. அந்த கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.

அதற்கு ஏற்ப அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மொயீன் அலி, புஜாரா, உத்தப்பா என அனுபவ வீரர்களை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கவுதம், ஹரிஷங்கர், ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரன், ஷர்துல் தாகூர் என இளம் வீரர்களுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். ரெய்னா, ராயுடு, உத்தப்பா, பிராவோ, மொயீன், டு பிளெஸ்ஸி, தாஹிர், சான்ட்னர் ஆகியோரின் அனுபவம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி விட்டார். அவருக்குப் பதிலாக 23 வயது விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கேப்டனாக முதல்முறையாக கால் பதிக்கிறார்.

டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திடமாக உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: மொயீன் அலி அல்லது ருதுராஜ் கெய்க்வாட், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, கிருஷ்ணப்பா கவுதம், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் சுமித், ரிஷாப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *