செய்திகள்

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்

மாநிலங்களவையில் தம்பிதுரை எம்பி கோரிக்கை

டெல்லி, மார்ச் 23–

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து, இந்தியா வாக்களிக்க வேண்டும் என, மாநிலங்களவையில் அண்ணா திமுக எம்.பி. தம்பிதுரை, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அண்ணா திமுக எம்.பி தம்பிதுரை, “இலங்கையில் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா மனித உரிமை மீறல், போர்க்குற்ற தீர்மானத்தில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, இந்தியா வாக்களிக்க வேண்டும்.

மோடி வாக்குறுதி

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக, இந்தியா இருக்கும் என பிரதமர் மோடி, தமிழகம் வந்தபோது கூறினார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் அங்கு வாழும் தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்ட முடியாது.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா ஆதரவு கொடுக்க வேண்டும். தமிழகம் வந்தபோது பிரதமர் மோடி கூறியபடி செயல்பட வேண்டும். எந்த நாட்டில் எந்த இனம் உரிமைக்காக போராடினாலும் அதிமுக அதை ஆதரித்தே வந்துள்ளது என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *