நாடும் நடப்பும்

ஐ.நா.வில் இந்திய நாட்டின் ஒருங்கிணைப்பு, வலுவூட்டல்!


நாடும் நடப்பும்


சர்வதேச அரங்கில் இந்திய தரப்பு கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவது அதிகரித்து வருவதை உணர முடிகிறது. வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் இந்தியாவின் கருத்துக்களை பல நாட்டு தலைவர்கள் மனம் திறந்து பாராட்டுவதுடன் பல சர்வதேச அரங்கங்களில் மேற்கொள் காட்டப்பட்டும் என்றுபேசப்படுகிறது.

அது மட்டுமா? சர்வதேச அரங்கில் மதிக்கப்படும் ஐ.நா. கூட்டமைப்பின் நிரந்தர உறுப்பு நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட நாடாக இந்தியா எட்டாவது முறையாக பதவி வகிக்கிறது. நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்துடன் சுழற்சி முறையில் தேர்தலில் போட்டியிட்டு வென்று அப்பொறுப்பை பிடித்து விடும் ஐந்து நாடுகளும் உண்டு.

சென்ற ஆண்டு நமது வெளியுறவு கொள்கைகள் பிடித்து இருந்ததால் எட்டாவது முறையாக மீண்டும் அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டோம். குறிப்பாக நாம் அணி சேரா நாடாக இருப்பதாலும் பிரிக்ஸ், எஸ்சிஓ முதல் அமெரிக்கா உருவாக்கிய குவாத் அமைப்பு வரை உலக விவகாரங்களில் நமக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருப்பதால் நமது பணிகள் ஐ.நா. சபையில் இருக்க வேண்டும் என்று பல நாடுகள் கருதுகிறது.

விரிவாக்கம் வேண்டும்

ஐ.நா. சபையின் நிரந்தரம் இல்லா உறுப்பினர் அந்தஸ்து இந்த ஆண்டுடன் நிறைவுக்கு வந்து விடும். தற்போதைய ஐ.நா.வில், இந்தியாவின் நிரந்தர தூதுவர் பதவியில் இருக்கும் திருமூர்த்தி, தான் விரைவில் ஓய்வு பெற்று அப்பதவியில் இருந்து விடைபெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பொறுப்பு மிக்க அப்பதவிக்கு விரைவில் புதியவர் ஒருவரை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

புதியவர் செய்ய வேண்டியது ஐ.நா. சபை விவகாரங்களில் இந்தியாவின் ஒருங்கிணைப்பு மற்றும் வலுவூட்டல் தொடர வேண்டும். ஐ.நா. சபை வரும் நாட்களில் உலக விவகாரங்களின் புதிய மாற்றங்களை உணர்ந்து, விரிவாக்கம் செய்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு குரல் கொடுக்க ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர்கள் இங்கிலாந்தும் பிரான்சும் இருக்கிறது. மேற்குப் பகுதியின் பிரதான நிலப்பரப்பு அமெரிக்காவும் ஐரோப்பா மற்றும் ஆசியாவை உள்ளடக்கிய அகண்டு விரிந்த நிலப்பரப்பு கொண்ட ரஷ்யாவும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவும் ஆசியக் கண்டத்தின் பிரதிநிதியாக ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பிரதிநிதித்துவம் இல்லை

மத்திய ஆசியா, தெற்காசியா, கிழக்காசிய நாடுகளுக்கு, அதாவது சர்வதேச வரைபடத்தில் முக்கால் பகுதிக்கு மேல் ஐ.நா.வில் நிரந்தர பிரதிநிதித்துவம் கிடையாது.

இதுவரை ஐ.நா.வில் நமது செயல்பாடுகள் மிக அதிகமாகவே இருப்பது தான் உண்மை. பல கலவரப் பகுதிகளில் ஐ.நா. அமைதிப் படையில் இந்திய ராணுவ வீரர்களின் பங்கேற்பு மிக அதிகமாகும்.

மனிதநேயத்துடன் அணி சேராமல் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறோம். ஆகவே நிரந்தர உறுப்பினர் பதவிக்கு நாம் தகுதி உடையவர்கள் தான்! ஆனால் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து எளிதில் கிடைத்து விடாது.

5 நிரந்தர உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும். மேலும் அனைத்து உறுப்பினர்களில் 75 சதவிகிதம் பேர் ஆதரவு பெற்றால் தான் விரிவாக்கம் இயலும். அதில் இந்தியாவுடன் ஜப்பான், ஜெர்மனி உட்பட பல நாடுகள் போட்டியில் குதிக்கும்!

ஒருங்கிணைப்பு

இதையெல்லாம் நடைமுறைப்படுத்த பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை தற்போது நிரந்தர தூதராக இருக்கும் திருமூர்த்தி கூறுவது போல் இனி வரும் நாட்களிலும் ஒருங்கிணைப்பு மற்றும் வலுவூட்டல் அதாவது “consolidation and reinforcement in UN ” என்பதை தாரக மந்திரமாக ஏற்று செயல்பட்டு கொண்டு இருப்போம்.

சென்ற முறை நாம் நிரந்தரமில்லா உறுப்பு நாடாக உயர, தேர்தலில் நின்றபோது பாகிஸ்தான், சீனா உட்பட பல நாடுகள் நமக்கு ஆதரவு தந்து வாக்களித்துள்ளது!

நாம் 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்த ஆண்டில் ஐ.நா.வில் நமது செயல்பாடுகள் பெருமைக்குரியதே! நூற்றாண்டை கொண்டாடும் நாளில், நமது ஜனநாயக வெற்றிகளும் எடை போடப்பட்டு, சிறப்புகளை மனதில் கொண்டு ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராகும் தகுதியை உருவாக்குவோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *