நாடும் நடப்பும்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பொறுப்பு


ஆர். முத்துகுமார்


இந்த மாதம் துவக்கம் முதல் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.

நாம் 75–வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இத்தருணத்தில் சர்வதேச அமைப்பின் தலைமையை ஏற்று இருப்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும்.

ஆப்கானிஸ்தான் தமிழக மீனவர் மீது தாக்குதல், லடாக் பகுதியில் சீனாவின் ஊடுருவல் போன்ற பல்வேறு தலைவலிகளை பற்றி உலகம் தெரிந்து கொள்ள நமது குரல் கேட்கப்படக் கூடிய பதவி இது என்பதும் நமது பாதுகாப்பு விவகாரங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல செய்தி ஆகும்.

ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 தற்காலிக உறுப்பினர்களும் உண்டு. அதில் ஒரு நாடு இந்தியாவாகும். ஆசியா பசிபிக் கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான நமக்கு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் இம்மாதம் நடைபெற இருக்கிறது அல்லவா? அதில் தலைவராக நமது பிரதமர் மோடி அமர்ந்து இருக்க உலக தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

முன்பு 1992–ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்டிருக்கும் நிகழ்வாகும். ஆனால் இம்முறை அக்கூட்டம் நமது பிரதமர் தலைமையில் நடைபெறும்.

கடல் சார் பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்டுவது, தீவிரவாத தடுப்பு ஆகிய மூன்று முக்கிய ஆலோசனை கூட்டங்களை நமது தலைமையிலான ஆகஸ்ட் மாத நிகழ்வுகள் நடைபெறும்.

மேலும் உலகெங்கும் பல்வேறு அமைதி காப்புப் பணிகளில் ஈடுபட்ட அமைதிப் படையினரின் நினைவாக நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் இந்தியா தான் நடத்த இருக்கிறது.

சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன், மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் குறித்தும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்த இருக்கிறோம்.

உலக நாடுகள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை எப்படி அவர்கள் சந்திக்கிறார்கள் என்பதை அந்த நாடுகளின் கருத்துக்களையும் பல்வேறு பின்னணி தகவல்களையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காஷ்மீரத்தில் நாம் எடுத்து வரும் கொள்கை மாற்றங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து வருவதையும் சர்வதேச அரங்கில் மார் தட்டிக் கொள்ள இது நல்ல தருணம் ஆகும்.

சர்வதேச சட்டத்திட்டங்களை வடிவமைப்பது – அதை ஏற்று நடைபோடுவது என பல்வேறு அம்சங்களில் நாம் சாதித்து வருவதும் அமைதியை விரும்பும் நாடு நாம் என்பதை மீண்டும் உலகிற்கு எடுத்துக் கூற இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.

அமைதிக்கும் எதிர்கால நலனுக்கும் குரல் கொடுப்பதுடன் அதற்காக களப்பணியாற்றும் நாம் 1966–ல் ஐ.நா. சபையில் முதல் முறையாக நமது கானக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி – முன்னாள் இந்திய கவர்னர் ஜெனரல் மூதறிஞர் ராஜாஜி எழுதிய ‘குறையொன்றும் இல்லை ; மறை மூர்த்தி கண்ணா ’ (‘மைத்ரீம் பஜதே’ ) பாடியதை நினைத்துப் பார்க்கும் போது ஒரு பரவசம் பிறக்கிறது. அவர் பாடிய தினத்தின் 50–வது ஆண்டை நினைவு கூறும் வகையில் ஐ.நா. சபை விசேஷ ஸ்டாம்பையும் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

ஐ.நா. சபையின் தற்போதைய தலைவர் டி.எஸ்.திருமூர்த்தி தமிழகத்திலிருந்து சென்றுள்ளவர் ஆவார். அது நமக்கு பெருமை தருவதாக இருப்பதுடன் தமிழகத்தின் பெருமைகளையும் தமிழினத்தின் பாரம்பரியத்தையும் உலகிற்கு பறை சாற்றுகிறது.

மேலும் ஐ.நா. சபை உருவான நாள் முதலாய் நமது மூத்த தூதரக அதிகாரிகள் அதில் படுதிறமையாக பணியாற்றி வருவதை உலகம் அறியும். இந்நேரத்தில் ஐ.நா. சபையின் முதல் பெண் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி பண்டிட்டையும் நினைவு கூறும் வகையில் இதே ஆகஸ்ட் மாதத்தில் 18–ம் தேதி அவரது பிறந்த நாளை கொண்டாடும் நினைவலைகள் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமையில் இருக்கும் நாம் உலகிற்கு சுட்டிக் காட்ட நல்ல சந்தர்ப்பமாகும்.

நாம் ஐ.நா. உருவான நாளில் இங்கிலாந்து ராஜ்ஜியத்தில் இருந்ததால் நமக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது போனது.

பிரிட்டன் மேற்கொண்ட உலக யுத்தங்களில் மிக அதிக உயிரிழப்பு நமது இந்திய ஜவான்கள் தான்! பிரிட்டனின் பலமான ராணுவ படையின் பெரும் சதவிகிதம் இந்திய வீரர்கள் ஆவர்.

இந்த ஒரே காரணத்திற்கு மதிப்பு பெற்று தான் ஐ.நா. சபையில் பிரிட்டன் நிரந்தர உறுப்பினராக முடிந்தது.

இது இந்தியாவிற்கு அநீதி ஏதுமில்லை என்றாலும் இங்கிலாந்து இதுவரை அதற்கு நன்றி கூறியது கிடையாது.

ஆனால் நாமும் இதுவரை எந்த பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தும் உலக அமைதிகளுக்காக இன்றும் நமது ராணுவ வீரர்களை பல்வேறு நாடுகளுக்கு ஐ.நா.வின் பாதுகாப்பு படையில் அங்கம் வகிக்க அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம். அது மட்டுமா? ஐ.நா.வின் செலவுகளுக்கும் வருடம் தவறாது தரவேண்டிய பெரும் தொகையை தந்து கொண்டுதான் இருக்கிறோம்.

பிரிக்ஸ், எஸ்சிஓ, குவைத் போன்ற அமைப்புகளில் நமது பங்களிப்பு வரவேற்கப்பட நமது உலகளாவிய பரந்த நோக்கமும் ஒரு முக்கிய காரணமாகும்.

அகண்ட பிரதேசமான ஆசியாவில் சீனா ஐ.நா.வில் பிரதிநிதித்துவம் பெற்று இருக்கிறது. நான்கு ஐரோப்பிய நாடுகள் ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்கள் ஆவர்.

உலக ஜனத்தொகை அடிப்படையிலும் உலக நடப்புகளில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு இருப்பதாலும் நமக்கு ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் ஆவோம். ஆனால் இதுவரை சீனாவும் அமெரிக்காவும் நம்மை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

தற்போது கிடைத்துள்ள தலைமைப் பொறுப்பை நடுநிலையோடு உரிய வகையில் கண்ணியத்துடன் செயல்பட்டு உலக அமைதியை நிலைநாட்டிச் செயல்பட கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பு அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கு உந்துதல் சக்தியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *