செய்திகள்

ஐபிஎல்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை வென்ற டெல்லி கேப்பிடல்ஸ்!

ஐக்கிய அரபு அமீரகம், செப். 23-

ஐபிஎல் கிரிக்கெட் நேற்றைய (செப்டம்பர் 22) போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ரித்திமான் சஹா சிறப்பான தொடக்கம் தர தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பவர்பிளே முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹைதராபாத் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறி கொடுத்தது. டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஹைதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணியின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பாதியிலேயே வெளியேறினார்.

முதல் 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அப்துல் சமாத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய ககிசோ ரபடா மூன்று விக்கெட்டுகளையும், நோர்ஜோ மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் பிரித்வி ஷா 11 (8) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ஷிகர் தவானுடன், ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். சீரான இடைவெளியில் ரன்களைக் குவித்து வந்த இந்த ஜோடியில் ஷிகர் தவான் 42 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஷ்ரேயாஸ் அய்யருடன், கேப்டன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 47 (41) ரன்களும், ரிஷப் பந்த் 35 (21) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 17.5 வர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

அபுதாபியில் இன்று (செப்டம்பர் 23) இரவு நடக்கும் 34ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *