சிறுகதை

ஐந்து ரூபாய் | ராஜா செல்லமுத்து

எப்போதும் ஒரே வழித்தடப் பேருந்தில் பயணிப்பதால் ஓரளவுக்கு அந்தப் பயணிகள் எல்லாம் சிவாவுக்கு பரிச்சயம். ஒரு சிலருடன் உரையாடுவான். ஒரு சிலரைப் பார்ப்பதோடு சரி. உரையாட நேரம் கிடைத்தால் உரையாடுவான். இல்லை பார்வைகளாலே பல பேசுவான். அப்படிப் பயணம் போகும் போது அவன் படித்த பாடங்கள் பல.

“ஹலோ…. ஹலோ …. என்று அவன் பேசும் போது எதிரில் நின்றிருப்பவன் யாரையோ கூப்பிடுவது போல நின்றிருப்பான்.

உங்களை தாங்க .

“எஸ்…, என்று இங்கிலீஷ் இழுவை இழுப்பான்.

“ஏங்க நீங்க வீட்டிலயும் இப்படிதானா? என்ற சிவாவின் கேள்விக்கு, அவன் பதில் சொல்லாமலே திரும்பிப் பார்த்தான்.

“இல்ல தோள்ல போட்ட பைய கீழே எறக்கி வைக்கவே மாட்டீங்களா? பைய வச்சு இந்த இடி இருக்கிறீங்க? கொஞ்சம் தள்ளி நில்லுங்க , இல்ல பைய கொஞ்சம் கீழே எறக்கி வையுங்க.

“ஹலோ பஸ்ன்னா…. அப்படித்தான் இருக்கும். சொகுசா வரணும்னு ஆசபட்டா எப்படி? என்றவனை சிவா ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“ம்ம்…… நான் வேணும்னா ஒரு கத்திய எடுத்துட்டு வந்து உங்க வயித்துக்கு முன்னாடி நிக்கிறேன். அப்ப நீங்க தள்ளி நிப்பீங்களா? யோவ் பண்றது தப்பு. இதுல வியாக்ஞானம் வேற என்ற சிவாவின் வார்த்தையைக் கேட்டு பையைப் போட்டிருந்தவன் கொஞ்சம் தள்ளி நின்றானே யொழிய தவறியும் பையை அவன் தோளிலிருந்து கீழே இறக்கவேயில்லை.

பிதுங்கி வழியும் கூட்டம். நிறுத்தங்களில் ஆட்கள் ஏறி இறங்கிக் கொண்டே இருந்தன.

அவ்வளவு கூட்டத்திலும் ரேவதியை அவன் பார்க்கத் தவறவில்லை.

ரேவதி என்ற பெயருக்குத் தகுந்த மாதிரியே அவள் நடிகை ரேவதி மாதிரியே அழகாக இருப்பாள். எவ்வளவு நாள் பயணம் செய்தாலும் தவறியும் அவன் ரேவதியுடன் கூட பேசவே இல்லை.

பார்ப்பதோடு சரி, பார்வைகளாலே பேசிக்கொள்ளும் இருவரும் வாய் தவறிப் பேசவே இல்லை.

“பாஸ்… பாஸ்… கொஞ்சம் தள்ளி நில்லுங்க”

“ம்ம்” …. என்று இழுத்தவனை

“ஹலோ கொஞ்சம் தள்ளி நில்லுய்யா”

எங்க?

“டேய் கொஞ்சம் தள்ளி நில்லுடா என்று சிவா கொஞ்சம் அரற்றவும் பாவம்டா எங்க வேலை செய்யுதுகளோ? ஜவுளிக்கடையோ? பார்லரோ? பலசரக்கு கடையோ? செருப்புக் கடையோ? இங்க இப்படி மிதிபட்டு போயி நாளெல்லாம் கால்கடுக்க நின்னு வேல செய்யுற பொண்ணுங்கள நீங்களும் இந்த இடி இடிச்சா எப்படி?

தப்பு….. தப்பு….. உங்க வீட்டில இருக்கிற அக்கா தங்கச்சிங்கள இப்படி இடிப்பீங்களா?

எவனோ எவன் வீட்டுப் பிள்ளையோதான? ம்ம்ம என்று சிவா சொல்ல வெட்கப்பட்ட சில காட்டுமிராண்டிகள் கொஞ்சம் தள்ளி நின்றனர்.

இப்படி கொஞ்சம் கரிசனையாகப் பேசும் பேச்சுக்கள், வழக்கமாக வரும் பேருந்தில் உள்ள பெண்களுக்குப் பிரபலம்.

சிவா ரொம்ப நல்லவருங்க . பொண்ணுங்க மேல கொஞ்சம் கரிசனையா இருப்பாரு .அவரு முன்னாடி தைரியமா நின்னுட்டு போகலாம். ஒரு பாதுகாப்பான ஆளுங்க சிவா என்று அந்தப் பேருந்துத்தடப் பெண்களெல்லாம் பேசிக்கொள்வார்கள்.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும் ஒருநாளில்…..

பணி முடித்து தன் வழித்தடப் பேருந்தில் ஏறினான் சிவா. அவனுக்கு முன்னே ரேவதி ஐயய்யோ இவங்களா? இவங்கள லேசா கூட நான் இடிச்சதில்லையே இப்ப போயி என்று இழுத்தபோது ரேவதியைச் சுற்றி ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. பட்டென சிவாவிடம் திரும்பியவள் அஞ்சு ரூவா சில்லரை கொடுங்க என்று கேட்டபோது வாய் வராதவன் பையில் கையை விட்டு சில்லறையை அள்ளிக் கொடுக்க அதில் ஒரே ஒரு அஞ்சு ரூபாய் காய்னை மட்டும் எடுத்துக்கொண்டாள். பின் அவளே டிக்கெட்டும் எடுத்துக் கொண்டாள் இதைப் பார்த்தவர்கள் ரேவதியை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்றனர்.

ஏன் ரேவதி நம்ம கிட்ட காசு கேட்டா. அதுவும் திடீர்ன்ன நெருங்கி நின்னுருந்த ஆம்பளைங்க கூட்டம் கொஞ்சம் ஒதுங்கி நின்னாங்களே அதுக்கா இருக்குமோ ?

எது எப்படியோ? நம்மால ஒரு நல்லது நடந்துச்சே அது சிறப்பு. ரேவதி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டே வந்தாள். சிவா அவளுடன் பேசவே இல்லை. இன்றும் தான் அதே பேருந்தில் அதே வழித்தடத்தில். ஆனால் சிவா ஒரு வார்த்தை கூட ரேவதியிடம் பேசுவதே இல்லை. அது மட்டும் இல்லை. அந்த ஐந்து ரூபாய் என்ன ஆனது என்றும், அவன் இதுவரை கேட்பதும் இல்லை. தினமும் பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

“எதிர்பாராதது நிகழும் போது எல்லாம் ஆச்சர்யம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *