சிறுகதை

‘ஐந்தும் ஆறும்’ | ராஜா செல்லமுத்து

கழுத்தை நெரிக்கும் கஷ்டத்தில் இருந்தான் சவரி. அவனின் உடைமைகள் கூட கடனுக்கு ஈடாகப் போனது.

யாரிடம் எப்படிப் போய் கேட்பது?

கேட்டா தான் தருவாங்களா? அப்படியும் மனுசங்க இங்க இருப்பாங்களா என்ன? என்ற உணர்வில் இருந்தான் சவரி.

‘‘சவரி நல்லவன் தான்ங்க. ஆனா, என்ன…. மனுசன, மனுசனா மதிக்கத் தெரியாத பய. தான் அப்படிங்கிற இறுமாப்பு உள்ள ஆளு. அதுனால தான் இப்ப இப்பிடி அல்லாடிக்கிட்டு இருக்கான். விரலுக்கு தகுந்த வீக்கம் இல்ல. எல்லாம் ஆடம்பரம். இருக்கிறதுக்கு மேல செலவு செய்ற செலவாளி. அதான் இப்பக் கடன்காரனா அலையுறான்’’ என்ற ஒரு நண்பனின் கேள்விகளுக்கு பதில் சொன்னான் இன்னொரு நண்பன்.

ஒரு மனுசன் எப்பிடி இருக்கக் கூடாதுங்கிறதுக்கு சவரி ஒரு நல்ல உதாரணம். இவனப் பாத்து நாலு மனுசங்க திருந்துனா அது தான் தப்பா போற ஆளுகளுக்கு ஒரு பாடம்.

‘ஆமா, கடவுள் தான் ஓரளவுக்கு குடுத்தானே, அத வச்சு பொழைக்காம… அத விட்டுட்டு இன்னும் இன்னும் சம்பாதிக்கணும்ங்கிற பேராசை. ஆசை, யாரை விட்டுச்சு. இப்ப பாத்தீங்களா கடவுள் என்ன பண்ணுனான்னு. இனியாவது திருந்துவானான்னு பாப்பமே’ என்ற நண்பர்கள் சவரியின் நல்லது கெட்டது பற்றிப் பேசிக் கொண்டே இருந்தனர்.

சவரியின் நிலையைக் கேட்ட மணி தானாகவே அவனுக்கு உதவ முன் வந்தான்.

‘ஏய் மணி… அவனுக்கு உதவி செய்யப் போறீயா?

‘ஆமா’

‘நல்லா யோசி மணி… அவன் ஒரு மாதிரியான ஆளு. அவனுக்கு நல்லது செய்றதும் ஒண்ணு தான். நாமளே நாண்டுகிட்டு சாகுறதும் ஒண்ணு தான். அவன் ஒரு மாதிரி கேஸ். அதனால தான் கடவுள் அவன இந்த நிலைக்கு கொண்டு போயிருக்கான்’’ என்ற மணிக்கு எத்தனையோ பேர் ஆறுதல் சொன்னார்கள். சவரிக்கு உதவி செய்வதிலிருந்து மணி தவறவே இல்லை.

‘சவரி வீட்டிற்கு சென்றான் மணி. தான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற பாங்கு எவன் உள்ளத்தில் உதிக்கிறதோ அவனே உயர்ந்தவன்’ என்ற வரிகள் உதவி செய்பவர்களுக்கு உகந்தவை’ என்பது உதவி செய்பவர்களுக்கு பொருந்தும். அப்படிப்பட்ட ஒரு மன நிலையில் இருந்த மணி, சவரிக்கு தேடிப் போய் உதவி செய்தான். அவனை சவரி வரவேற்கவில்லை உபசரிக்கவில்லை.

மணி செய்த உதவியை அலட்சியமாகவும் அவனை ஒரு பொருட்டாகவும் நினைக்க மறந்த சவரியின் நடவடிக்கை மணிக்கு என்னவோ போலானது.

இப்பிடியும் மனுசங்க இருப்பாங்களா? கஷ்டப்படுறானேன்னு தான நாம உதவி செஞ்சோம். இவன் என்னாடான்னா, யாருக்கோ உதவி செய்ற மாதிரி இருக்கானே, சரி போகட்டும். நாம மனுசன். ஒரு மனுசன் கஷ்டப்படுறத பாத்து தான் உதவி செஞ்சோம்.

ஆனா இவன் என்னடான்னா யாருக்கோ உதவி செஞ்சது மாதிரி மூஞ்சிய தூக்கிட்டு திரியுறான்.

ச்சீ… இவ்வளவு தான் மனுசன் போல’ என்ற மணி மனசு உடைந்து, போய் சாலை வழியே நடந்து வந்தான். மனிதர்கள் உருவில் நிறைய மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

சவரியின் நடவடிக்கையைப் பார்த்த பிறகு மனிதர்களின் மதிப்பு மணிக்கு மலிந்தே தெரிந்தது.

அவன் ஒரு சாலையைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

‘பச்சை விளக்கு சிவப்பு விளக்குக்கு மாற இன்னும் சில நொடிகளே இருந்தன. மணியும் இன்னும் சில மனிதர்களும் சாலையின் ஓரத்தில் நின்றிருந்தனர். எல்லோரின் கவனமும் சிக்னலில் குவிந்தது.

பச்சை, மஞ்சளுக்கு வந்தது. சிவப்புக்கு வந்ததும் மணியுடன் சேர்ந்து சில மனிதர்கள் அந்த சாலையைக் கடக்க முன் வந்தனர்.

அப்போது எங்கிருந்தோ ஓடி வந்தது, ஒரு நாய். அது அந்தச் சந்தடிகள் நிறைந்த சாலையின் குறுக்கே ஆட்கள் நகர மணியுடன் சேர்ந்து, அவன் காலடித் தடத்திலேயே அந்த நாய் நடந்து வந்தது. இதைப் பார்த்த மணியும் ஆதரவாகவே அந்த நாயைக் கூட்டிப் போய் சாலையின் மறு திசையில் சேர்த்தான்.

நன்றி மறவாத அந்த நாய், சாலையைக் கடந்ததும் தன் கால்களைக் கீழே போட்டு,–வாலை ஆட்டி தன் நன்றியைச் சொன்னது.

இதைப் பார்த்த மக்களுக்கு ஒரே ஆச்சர்யம்.

ச்சே… என்னவொரு நன்றி உணர்வுங்க… ஒரு ரோட கிராஸ் பண்ணி விட்டதுக்கே இந்த நாய் இவ்வளவு நன்றி உணர்ச்சியோட இருக்கு… நம்மகிட்ட உதவியும் வாங்கிட்டு நம்மள என்னான்னு கேக்காத ஆளுகளும் இங்க இருக்கத்தான் செய்றானுக. அதாங்க அஞ்சுங்கிறது. இங்க ஆறு அறிவு இருக்கிற மனுசன்னு சொல்ற எவனுக்கும் நன்றிங்கிறது கொஞ்சம் கூட கெடையாது. என்று ஒருவர் சொன்ன போது, மணிக்கு நன்றி சொன்ன நாய் குடுகுடுவென ஓடியது.

அப்போது தான் சவரி மாதிரியான மனுசங்களுக்கும் இந்த பூமியில தான் இருக்காங்க. ‘‘மனிதனாக இருப்பவனெல்லாம் மனிதனல்ல…’ நன்றியுள்ள நாயும் இங்க இருக்கதான் செய்யுது’’ என்று மணி சாலையைக் கடந்தபோது….

ஓடிச் சென்ற நாய் ஓரிடத்தில் நின்றபடியே மணியைப் பார்த்து வாலை ஆட்டிக் கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *