ஐதராபாத், டிச. 5–
ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியைக் காண சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ இன்று(05.12.2024) பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கவனித்துள்ளார்.
இப்படம் முன்பதிவில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், புக் மை ஷோ இணையதளத்தில் விரைவாக 10 லட்சம் டிக்கெட்கள் விற்ற முதல் படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ பெற்றது. மேலும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் படத்தை வரவேற்க ஆவலுடன் இருந்தனர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் இன்று வெளியானது. தெலுங்கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தெலங்கானா மற்றும் ஆந்திர அரசுகள் அனுமதி வழங்கின.
இப்படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழகத்தைத் தவிர பரவலாக பல மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் இப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று இரவு திரையிடப்பட்டது. அங்கு அல்லு அர்ஜூன் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் அல்லு அர்ஜூன் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தும் திரையரங்கு முன் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
அந்த திரையரங்கில் அல்லு அர்ஜூன் காரில் வருகை தந்ததால், அவரை நோக்கி கூட்டம் சென்றது. அப்போது கூட்ட நெரிசலில் ரேவதி(39) என்ற பெண்மனி சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரது மகனும் அங்கு சென்றிருந்த நிலையில் அவரும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார். மேலும் படுகாயமடைந்து மயங்கி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.