ஐதராபாத், செப். 12
ஐதராபாத்தில் புதிய வகையான டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில், சில எலக்ட்ரானிக்ஸ் மொத்த வியாபாரக் கடைகளில் சிலர் வாங்கிச் செல்லும் பொருளுக்கான பணம் வரவு வைக்கப்பட்டப் பிறகு, இல்லாமல் போயிருக்கிறது. இதற்குப் பின்னணியில் மோசடி நடவடிக்கை இருக்குமோ என சந்தேகிக்கிறோம் என எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் ஃபராபாத், ஹைதராபாத், ரச்சகொண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதி காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையின் முடிவில் ஒரு கும்பல் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை தரப்பு, “20 – 25 வயதுக்குட்பட்ட ஒரு குழு பெரிய எலக்ட்ரானிக்ஸ் மொத்த வியாபாரக் கதைகளுக்குள் நுழைக்கிறார்கள். அங்கு லட்சக்கணக்கில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி, அதற்கு செலுத்தவேண்டிய பணத்துக்காக யூபிஐ ஸ்கேனரை ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு கூட்டாளியுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அவர் அந்தப் பொருள்களுக்கான பணத்தை அந்த UPI QR Code மூலம் செலுத்திவிடுகிறார். உடனே அந்தக் கும்பல் வாடிக்கையாளர்களைப் போல அந்தப் பொருள்களை எடுத்துச் சென்றுவிடும்.
12 பேர் கைது
அடுத்தபடியாக, உடனே தொகையைச் செலுத்திய ராஜஸ்தானில் இருக்கும் கூட்டாளி, தவறான வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பிவிட்டதுபோல ஒரு புகாரை வங்கியில் பதிவு செய்வார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, பரிவர்த்தனை தலைகீழாக மாற்றப்பட்டு பணம் மீண்டும் ராஜஸ்தான் கூட்டாளியின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்படும். இப்படி நூதனமுறையில் திருடப்பட்ட பொருள்களை விற்று, அதில் வரும் லாபத்தை அனைவரும் பிரித்துக் கொள்கிறார்கள்.
13 பேர் குழுவாச் சேர்ந்து சுமார் ரூ.4 கோடிக்கு டிஜிட்டல் திருட்டு செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ.1.72 லட்சம் ரொக்கம் பணம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் இதுவரை சோம்ராஜ், சுனில், ஷர்வான், சோம்ராஜ், சிவலால், ரமேஷ், ஷ்ரவன், பப்பு ராம், ஷ்ரவன், ராகேஷ், ரமேஷ், அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.