செய்திகள்

ஐதராபாத்தில் அம்பேத்கருக்கு 125 அடியில் வெண்கல சிலை

இந்தியாவிலேயே மிக உயரமானது

ஐதராபாத், டிச. 1–

அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த வெண்கல சிலை, ஐதராபாத்தில் முதலமைச்சரால் திறக்கப்படுகிறது.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 அடி உயரம் கொண்ட வெண்கலச்சிலையானது, ஐதராபாத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த சிலையானது இந்தியாவின் மிக உயரமான வெண்கலச் சிலையாக அமைக்கப்பட்டு வருகிறது.

ஐதராபாத்தில் உள்ள என்டிஆர் கார்டனுக்கு அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த சிலை, தற்பொழுது முடிவு நிலையில் உள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் சிலை கட்டி முடிக்கப்பட்டு, 2023இல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று திறக்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

125 வது பிறந்த நாள்

கடந்த ஏப்ரல் 14, 2016 அன்று, இந்த வெண்கல சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை அடிப்படையாக்கொண்டு சிலையின் உயரமானது, 125 அடியில் கட்டப்பட்டு வருகிறது.

சுமார் 150 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த சிலை, 45 அடி அகலத்துடன், 9 டன் எடை வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலைக்காக 155 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலையை தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று திறந்து வைக்கிறார்.

அமைச்சர் பிரசாந்த் ரெட்டி, இந்த திட்டமானது ஒரு சுற்றுலா தலமாக உருவாக்கப்படும் என்றும் டாக்டர் அம்பேத்கரின் நாடாளுமன்ற உரையாடல்களும், அவரது வாழ்க்கையை பற்றி அறிய உதவும் திரைப்படங்களும் பொதுமக்கள் முன்னிலையில் காண்பிக்கும் அருங்காட்சியகமாகவும் உருவாகும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *