பெங்களூரு, மார்ச் 30–
பெங்களூரில் ஐ.டி. பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர், 30 ஆண்டுகள் சிறையிலேயே இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில், திருமணமான 28 வயது பெண்ணொருவர் பணியாற்றினார். தினமும் நிறுவன காரில் அலுவலகம் சென்று வருவது வழக்கம். 2005 டிசம்பர் 13 இல் இரவு பணி முடிந்து வீடு திரும்பும் போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு காரை ஓட்டி சென்ற 34 வயது ஓட்டுனர் சிவகுமார், பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இச்சம்பவம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரை கைது செய்த போலீசார், பெங்களூரு விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்
விசாரணை நடத்திய நீதிமன்றம், ‘இவர் சாகும் வரை, சிறையில் இருக்க வேண்டும்’ என, 2010 இல் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், சிவகுமார் மேல் முறையீடு செய்தார். விரைவு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து தண்டனை அளவை குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஒகா, ராஜேஷ் பின்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:– பிரபலமான நிறுவனத்தில் பணியாற்றி, கை நிறைய சம்பாதித்த பெண் திருமணமாகி, அழகான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஆனால் குற்றவாளியின் ஈனச்செயலால், பெண்ணின் வாழ்வு 28 வயதிலேயே முடிந்தது. பெங்களூரு நகர், ‘சிலிகான் சிட்டி’ என அடையாளம் காணப்படுகிறது.
இங்கு பிரபலமான ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனங்களில் பெண் ஊழியர்களே, அதிக எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். சர்வதேச நிறுவனங்கள் என்பதால், இரவு நேரத்திலும் பணியாற்ற வேண்டும். இத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும், பெண் ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவே குற்றவாளி சிவகுமார் 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். அதுவரை, அவரை விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டனர்.