அறிவியல் அறிவோம்
வெறும் 15,000 ரூபாயில் நோட்டுப் புத்தக வியாபாரம் செய்த இளைஞர் ஒருவர் இன்று அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஐடி நிறுவனத்தைத் தொடங்கி 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறார்.
மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த மோனேஷ் ஜெயின்தான் இந்த ஆச்சரியத்துக்குச் சொந்தக்காரர்.
இன்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு, தன் சகோதரருடன் இணைந்து நோட்டுப் புத்தகங்கள் மற்றும் அச்சுக் காகிதங்களை வாங்கி விற்று வந்தார் மேனேஷ். இந்தத் தொழிலை தன் தந்தையிடம் 15,000 ரூபாய் கடனாகப் பெற்று ஆரம்பித்தார். முதல் மாதம் 12,000 ரூபாய் செலவானது. அதன்பிறகு சம்பாதிக்கத் தொடங்கினார் இதற்கிடையே அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்துக்கு மேல்படிப்புக்குச் சென்றதால் வியாபாரத்தைக் கைவிட்டார். 2012-2013 ஆம் ஆண்டு உலக அளவிலான மளிகை வணிக நிறுவனத்துக்கு மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றினார். தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற விரும்பும் பல நிறுவனங்களுக்கு இதுபோன்ற மென்பொருள் தேவைப்படும் என்று மோனேஷ் நினைத்தார்.
இதையடுத்து அந்த வேலையை விட்டுவிட்டு, தன் சகோதரருடன் இணைந்து இந்தூரில் ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார். இது குறித்து மோனேஷ் கூறும்போது, ”ஆரம்பத்தில் மளிகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைச் சந்தித்தோம். நாங்கள் கூறுவதை எல்லாம் கேட்டார்கள். ஆனால், நேர்மறையான பதில் எதையும் அவர்கள் சொல்லவில்லை. `நீங்கள் சிறிய நிறுவனத்தை நடத்துகிறீர்கள். உங்களால் பெரிய பணியை எப்படிச் செய்ய முடியும்’ என்று கேள்வி எழுப்பினர்.
படிப்படியாக சில நிறுவனங்களிடம் இருந்து பணிகளைப் பெற்றோம். நம்பிக்கை வந்ததும், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பணிகளைப் பெற்றோம். இதன்பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்குச் செயற்கை நுண்ணறிவு பணிகளைச் செய்து கொடுத்தோம். ஈஸ் கேஸ்டில் நிறுவனம் இந்தூரில் நாங்கள் ஐடி நிறுவனத்தைத் தொடங்க ஒத்துழைப்பு கொடுத்தது. கடந்த 8 மாதங்களாக நிறுவனத்தை 8 மடங்கு விரிவுபடுத்தியுள்ளோம். புதிய வளாகத்தைத் தொடங்கி, ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தூர் வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளோம். அமெரிக்காவின் ஹெச்ஐஜி நிறுவனத்துடன் இணைந்து கடந்த 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி வர்த்தகம் செய்துள்ளோம். மேலும், ஐடி நிறுவனங்கள் இந்தூருக்கு வர இது வழிவகுக்கும்” என்றார்.