செய்திகள்

ஐசிஎப் தொழிற்சாலையில் பேட்டரி கார் மோதி விபத்து: ஒப்பந்த பணியாளர் பலி

சென்னை, ஜூலை 29–

சென்னை ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பேட்டரி கார் ரெயில் பெட்டி மீது மோதிய விபத்தில் ஒப்பந்த பணியாளர் பலியானார்.

சென்னை பெரம்பூர், மங்களாபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 24). ஐசிஎப் பர்னிஷிங் தொழிற்சாலையில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த பணியாளராக கடந்த 5 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 4 மணியளவில் பார்த்தசாரதி பேட்டரி காரில் சென்று ரெயில் பெட்டிகளுக்கு ஜன்னல் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பேட்டரி காரை பின் பக்கமாக இயக்கிய போது அது ரெயில் பெட்டி மீது மோதியது. இதில் பேட்டரி காரில் நின்றிருந்த பார்த்தசாரதி அடிபட்டு கீழே சரிந்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை சக ஊழியர்கள் ஐசிஎப் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும் ஐசிஎப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *