செய்திகள்

ஐக்கிய எழுத்தாளர் சங்கம் சார்பில் 18 சிறந்த ஆளுமைகளுக்கு விருது

சென்னை, அக்.6-

ஐக்கிய எழுத்தாளர் சங்கம் சார்பில் 18 சிறந்த ஆளுமைகளுக்கு , தமிழக ஆளுநர் பன்வாரிலால் விருதுகளை வழங்கினார்.

ஐக்கிய எழுத்தாளர் சங்கம் மற்றும் பிராங்க் மோரீஸ் அறக்கட்டளை சார்பில், 35 வது மோரீஸ் நினைவு சொற்பொழிவு, பகவத் கீதை புத்தகம் வெளியீட்டு விழா, சிறந்த 18 ஆளுமைகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில், ஐக்கிய எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் தியாகராஜன் சிறப்பு விருந்தினரை வரவேற்றார்.

ஊழலை ஒழிக்க வழி

நிகழ்ச்சியில், தமிழக ஆளுனர் பன்வாரிலால், 18 சிறந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கியதுடன், ஆர். சிவக்குமார் எழுதிய பகவத் கீதை புத்தகத்தையும் வெளியிட்டு பேசியதாவது:–

பிராங்ளின் மோரீஸ் மிகச் சிறந்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கியவர். பத்திரிகையின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உச்சம் தொட்டவர். மேலும் லண்டனில் இருந்து, பல்வேறு புகழ்பெற்ற புத்தகங்களையும் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இந்திய சமூகத்துக்கு ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்புக்காக, அவரைப் போற்ற வேண்டியது நமது கடமை.

இந்தியா மிகச் சிறந்த வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால், இந்தியாவில் தற்போது உள்ள பெரும் பிரச்சினை என்றால், அது ஊழல்தான். அதனை வேரறுக்க வேண்டுமானால், காந்தியடிகள் போல், எளிய வாழ்க்கை வாழ வேண்டும். ஒரு 10 ஆண்டுகளுக்கு, நாம் அனைவரும் எளிய வாழ்வை வாழ்ந்தாலே, இந்த நாட்டை விட்டு, ஊழல், முறைகேடு ஆகியவை ஒழித்து விடலாம். அந்த நிலையில், இந்தியா இன்னும் அபரிமிதமான வளர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை என்றார்.

சிறந்த 18 பேருக்கு விருதுகள்

நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் ஸ்ரீவித்யா, புதுச்சேரி டாக்டர் ரமேஷ், பீமாவரம் மேஜிக் ஸ்டார் போஸ், சென்னை டாக்டர் தீபக் சுவாமி நாதன், கோவை நேசம் அறக்கட்டளை சி.செந்தில் குமார், சென்னையைச் சேர்ந்த லைன் எம்.காசிநாதன், எம். கோவிந்தராஜ், கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் பார்த்த குமார் முகாபத்யாய், சென்னையைச் சேர்ந்த ஆர். பாஸ்கரன், டாக்டர் சந்திரசேகர் உமாபதி, ஜே.ஜெயகிருஷ்ணன், என்.வி. சுப்பராமன், காஞ்சிபுரம் டாக்டர் எஸ். சீனிவாச சர்மா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பி. ஜஸ்டின் அந்தோணி ஆகியோருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த தர மேலாண்மைக்காக சென்னையைச் சேர்ந்த டாக்டர் வி.சுவாமிநாதனுக்கும், சென்னையைச் சேர்ந்த தேசிய இணையப் பாதுகாப்பு தர நிறுவனத்தின் டாக்டர் எஸ்.அமர் பிரசாத்துக்கு சிறந்த இளைஞர் மேம்பாட்டுக்கான விருது, சிறந்த டிரைனிங் பியூச்சர் ஸ்டார் விருது, சென்னை டாக்டர் லதா ஏ.கிருஷ்ணாவுக்கும், இளைஞர் மேம்பாடு செயலூக்கத்துக்கான விருது ஆந்திராவைச் சேர்ந்த சந்திர சுதூர் குமாருக்கும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *