பிரதமர் மோடி, அமீரக அதிபர் ஜாயித் அல் நஹ்யான் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
அபுதாபி, ஜூலை.16-
பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே உள்ளூர் பணத்திலேயே வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், அமீரக மத்திய வங்கி கவர்னர் காலத் முகமது பலமா ஆகியோர் பரிமாறிக்கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்த நாட்டு தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு நேற்று காலையில் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். தலைநகர் அபுதாபியில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அமீரக முப்படை அணிவகுப்பு மரியாதைய ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடியை, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார்.
பின்னர் இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. இதில் முக்கியமாக, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அவரவர் சொந்த நாட்டு பணங்களிலேயே மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது.
அமீரகத்தில் டெல்லி
ஐ.ஐ.டி. வளாகம்
அதன்படி உள்ளூர் பண பயன்பாட்டை ஊக்குவிக்கும் கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே வேகமான பணப்பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் அமீரக மத்திய வங்கி கவர்னர் காலத் முகமது பலமா ஆகியோர் கையெழுத்து போட்டனர். இதன் மூலம் அமீரகத்துடன் இந்திய ரூபாயிலேயே இனிமேல் வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.
இதைப்போல அமீரகத்தில் டெல்லி ஐ.ஐ.டி. வளாகத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் அபுதாபியின் கல்வி மற்றும் அறிவுசார் துறை இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் வளாகத்தை நிறுவும் 2-வது ஐ.ஐ.டி என்ற பெருமையை டெல்லி ஐ.ஐ.டி. பெற்றுள்ளது. முன்னதாக சென்னை ஐ.ஐ.டி கடந்த வாரம் தான்சானியாவில் வளாகத்தை திறப்பதற்கான ஒப்பந்தம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
20 சதவீதம்
வர்த்தகம் அதிகரிப்பு
அமீரக அதிபருடனான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானிடம் இருந்து எப்போதும் ஒரு சகோதர அன்பை பெற்று வருகிறேன். நமது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் விரிவடைந்ததற்கு நீங்கள் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் உங்களை உண்மையான நண்பராகவே பார்க்கிறார்கள். இந்தியா- – அமீரகம் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்து போட்ட பின்னர், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இரு நாடுகளின் பணத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக கையெழுத்து போடப்பட்ட ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான பொருளாதார ஒத்துழைப்பையும், பரஸ்பர நம்பிக்கையையும் காட்டுகிறது. இது பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் அதிகரிக்கும். இரு நாட்டு மத்திய வங்கிகளுக்கு இடையே போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாட்டு ஒத்துழைப்பின் மிக முக்கியமான அம்சமாகும். இது மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும். அத்துடன் சர்வதேச நிதி தொடர்புகளை எளிதாக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடிக்கு
சைவ உணவு விருந்து
இந்த சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘ஷேக் முகமது பின் ஜாயீத் அல் நஹ்யானை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சியாக உள்ளேன். அவரது ஆற்றலும், வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையும் போற்றத்தக்கது. கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் உள்பட இந்தியா-அமீரகம் உறவுகளின் முழு வீச்சு குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என குறிப்பிட்டு இருந்தார்.
அமீரக அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு ஷேக் முகமது பின் ஜாயீத் அல் நஹ்யான் சிறப்பான மதிய விருந்து அளித்தார். இதில் முற்றிலும் சைவ உணவுகளே இடம்பெற்றன. தாவர எண்ணெயில் செய்த உணவுகள், பேரீச்சை சாலட், மசாலா சாசில் பொரிக்கப்பட்ட காய்கறிகள் போன்றவை பரிமாறப்பட்டன. பால், முட்டை தயாரிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
இதைத்தொடர்ந்து அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
இந்த பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘ஒரு பயனுள்ள ஐக்கிய அரபு அமீரக பயணத்தை நிறைவு செய்துள்ளேன். நமது கிரகத்தை மேம்படுத்தும் ஏராளமான பிரச்சினைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. அன்பான உபசரிப்புக்காக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கு நன்றி’ என குறிப்பிட்டு இருந்தார்.