செய்திகள்

ஐகோர்ட் நீதிபதியின் பெயரைச் சொல்லி நகைக்கடையில் மோசடி செய்ய முயன்றவர் கைது

Spread the love

சென்னை, ஜுன். 20–

சென்னை திநகர் பிரபல நகைக்கடையில் ஐகோர்ட் நீதிபதியின் பெயரை சொல்லி 38 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி செய்ய முயன்ற ஆசாமியைப் போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சென்னை, ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன். சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறார்.

கண்ணன், தனது மனைவி லதாவுடன் தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடைக்கு சென்றார். தங்களிடம் உள்ள 38 சவரன் நகையைக் கொடுத்து அடமானம் வைத்துக் கொண்டு பணம் தரும்படி கேட்டுள்ளனர். இங்கு அடமானம் வைப்பது கிடையாது. விற்றால் அதற்குரிய பணத்தை கொடுத்து விடுகிறோம். திரும்பி தரமாட்டோம் என நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு கண்ணன், தான் ஐகோர்ட் நீதிபதி ஒருவரிடம் பணிபுரிவதாக கூறி நகைக்கடை ஊழியரை மிரட்டியுள்ளார். மேலும் செல்போன் மூலமாக கடையின் உரிமையாளரிடம் நீதிபதியை பேசச்சொல்லட்டுமா? என மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நகைக்கடை பாதுகாப்பு அதிகாரி ஹரிகிருஷ்ணன் மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நீதிபதியிடம் வேலைபார்ப்பதாக கூறியது பொய் என தெரியவந்தது. இதனையடுத்து ஆள்மாறாட்டம், அரசு ஊழியர் என கூறி மோசடி செய்தது ஆகிய 3 பிரிவின் கீழ் போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் வழக்கறிஞர் வெங்கடேஷ் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *