சிறுகதை

ஏ/சி | ராஜா செல்லமுத்து

கொளுத்தும் கோடை வெப்பம் – கொடூரமான அனல் காற்றை வீதியெங்கும் வீசிக் கொண்டிருந்தது. நெருப்பை உடுத்தி வருவது போன்று அனலை அள்ளிக் கொண்டு வந்த வெயிலை ரொம்பவே திட்டித் தீர்த்தான் சங்கர்.

அப்பப்பா என்ன வெயிலு இப்பிடியே வெயில் அடிச்சுன்னா– ஒடம்பெல்லாம் வெந்து அவுஞ்சு போகும்போல– யப்பப்பா தாங்க முடியல.

இந்த அக்னி பகவான் ஏன் இவ்வளவு உக்கிரத்த உதிர்க்கிறானோ என்ற சங்கரின் பேச்சை வழிமறித்த சேகர்.

‘இது அக்னி நட்சத்திர காலம் சங்கர். அப்படித் தான் வெயில் இருக்கு. இதயெல்லாம் சேந்தது தான் காலம். வெயில், மழை, புயல், காத்து, குளிரு, வெப்பம் இப்படி எல்லாத்தையும் உள்ளடக்குனது தான் இந்த உலகம்.

அது அது காலத்தில் அது அது கண்டிப்பா வந்தே தீரும். அத நாம அனுபவச்சு தான் ஆகணும்’ என்று சேகர் சொன்னான்.

முன்னையெல்லாம் இப்படியில்ல சேகர் . வெயில் ரொம்பவே கூடுதலா அடிக்குது. தாங்கவே முடியல என்றான் சங்கர் .

அப்பிடியெல்லாம் இல்ல சங்கர். சூரியன்ல இருந்து வந்த வெப்பம் ஒரே மாதிரி வந்திட்டு தானிருக்கு.

நாம தான் நம்ம நாமே கெடுத்திட்டோம். முன்னாடியெல்லாம் எவ்வளவு வெயில் அடிச்சாலும் இந்த பூமி தாங்குனதுக்கு காரணம்; இந்த பூமியெல்லாம் எங்கு பார்த்தாலும் மரம், செடி, கொடிகள்ன்னு பச்சைப்பசேல்ன்னு இருந்துச்சு. சூரியன்ல இருந்து வெளி வர்ற வெப்பத்த அந்த மரங்கள் தாங்கிக்கிருச்சு. ஆனா இன்னைக்கு நிலைமை அப்படியில்லை – மரத்தையெல்லாம் வெட்டி வீடு வாசல்னு கட்டிட்டோம். அதுனால தான் இந்த வெப்பம் நமக்கு பெருசா தெரியுது! என்று சேகர் சொன்னான்.

நீங்க சொல்றது ரொம்ப வாஸ்த்தவமான பேச்சு. இந்த நிலைமைக்கு காரணம் நாம தான்’ என்று சங்கர் ஆமோதித்தான்.

இருவரும் வெப்பம் பற்றி விரிவாகப் பேசிவிட்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். மாலை ஆறு மணிக்கே வீட்டிற்குள் உட்கார முடியாத சங்கருக்கு வேர்த்துக் கொட்டியது.

இப்பிடி வேர்த்துக் கொட்டுச்சுன்னா ராத்திரிக்கு எப்பிடி தூங்குறது. மொட்ட மாடியில போய் தூங்குனம்னா நல்லா இருக்கும் என்ன? மொட்ட மாடி தரை முழுசும் கடுமையா சுடுது. இதுல காதுல வந்து கொசு ஒரு கச்சேரியவே நடத்திட்டு இருக்கு. வீட்டுக்குள்ள படுக்கணும்னா ஒடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுது. அப்பிடியே போர்த்திட்டு படுத்தா, இன்னும் கூடுதலா வேர்த்துக் கொட்டுது. என்ன பொழப்புடா இது சாமி, என்று சங்கர் புலம்பினான்.

ம்க்கும்… தினமும் இதே பொலம்பல்தானா… இது தான் நம்மோட விதின்னு ஆகிப் போச்சு. தொனத் தொனன்னு பேசாமப்படுங்க’ என்று சங்கரை அதட்டினான் அவன் மனைவி.

‘இப்பப் பாரு இந்த கொடுமைய விட இன்னுமொரு பெரிய கொடுமை வரும் பாரு என்று சங்கர் சொல்லி வாய் மூடுவதற்குள்–

‘புஷ்’ என்ற சத்தத்தோடு பக்கத்து வீட்டிலிருந்த ஏ/சி சத்தம் கொடுத்தது. அதன் மானிட்டரிலிருந்த ‘பேன்’ அசுர வேகத்தில் சுழன்றது–

‘மகராசனுக, இங்க நாம வேர்வையில வெந்து செத்திட்டு இருக்கோம். இவனுக என்னான்னா குளு குளுன்னு ஏ/சியில தூங்கிட்டு இருக்கானுக. அவனுக சந்தோசமா தூங்குனா பரவாயில்லை. மத்த ஆளுகள ரொம்ப டார்ச்சர் பண்றானுகளே அதுவும் அவன் ஏ/சி மிசின, ரொம்ப சரியா நம்ம வீட்டு சன்னலுக்கு நேரா வச்சுருக்கானுக. அந்த பேன் விர்ன்னு ரொம்ப வேகமாக சுத்தி இருக்கிற வெப்ப காத்த நம்ம கிட்டயே திருப்பி அனுப்பிட்டு, அவனுகளுக்கு மட்டும் குளிர குடுக்குது. இது அந்த வீட்டுக்காரனுகளுக்கு தெரியுமா தெரியாதா? ஏழைகள்ன்னாலே ரொம்ப எளக்காரம். அதான் எத பத்தியும் சட்ட பண்ணாம மத்தவங்க எக்கேடு கெட்டுப் போனா என்னான்னு தானே இப்பிடி, நம்ம மூஞ்சிக்கு நேரா ஏ/சி மிசின வச்சுருக்கான். அந்த பேன் குளிர உள்ள தள்ளிட்டு, வெப்பத்த மட்டும் நமக்கு குடுக்குது. என்ன கொடுமைடா இது– இயற்கையிலதானா இவ்வளவு வெயிலு, வெப்பம் கொடுமைன்னா இந்த மனுசங்க வேற இவ்வளவு வெப்பத்த நமக்கு குடுக்கிறாங்க. அவன்க நல்லா இருக்கான்க. ஆனா நம்மள தான் சாகடிக்கிறானுக என்று சங்கர் சொன்னான்.இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சங்கரின் மகன் ஓடிப் போய், வேகமாய் ஓடிக் கொண்டிருந்த ஏ/சி மிசினின் பேனின் மீது கல்லெடுத்து எறிந்தான்.

‘விர்’ என விரைந்து கொண்டிருந்த பேன், கல்லடிப் பட்டு, அந்தக் கல் பேன் இறக்கைகளுக்கு நடுவே அப்படியே நின்றது. பேன் சுழலாமல் டடக், டடக் என்று ஓட முடியாமல் தள்ளாடியது.

‘ஐயய்யோ என்ன காரியம் பண்ணுன. அவங்களுக்கு தெரிஞ்சா சண்ட வருமோ’ என்ற சங்கரின் மனைவி பதற்றமடைந்தாள்.

அவன் பண்ணுனது தப்பில்ல. அவனுக மட்டும் ஏ/சியில படுக்கணும் நாம வேர்வையில அதிலயும் அவனுக ஏ/சி வெப்பம் முழுசும் நம்ம வீட்டுக்குள்ள அவன் பண்ணுனது தப்பில்ல’ என்று சங்கர் சொன்னான்.

இங்க பாருங்க, அவங்க உழைக்கிறாங்க. சம்பாதிக்கிறாங்க. வசதியா இருக்காங்க, ஏ/சி போடுறாங்க. என்னமோ செய்றாங்க. நாமளும் அது மாதிரி உழைக்கணும், முன்னேறணும்; ஜெயிக்கணும்; அதவிட்டுட்டு அடுத்தவங்க மேல பொறாமைப்படக் கூடாதுங்க’ என்ற சங்கரின் மனைவி பேனில் சிக்கியிருந்த கல்லை ஒரு கம்பு கொண்டு மெல்ல வெளியே எடுத்து விட்டாள்.

டக் டக் என்று அடித்துக் கொண்டிருந்த பேனின் இறக்கைகள் இப்போது, இப்போது ‘சர்’ என ஒரே சீராகச் சுற்ற ஆரம்பித்தது.

‘போங்க, நல்ல வேலையைப் பாருங்க. இவங்கள விட சம்பாதிக்க முடியுமான்னு யோசிங்க. இவங்கள விட ஏ/சி அது இதுன்னு வாங்குங்க. அதுதான் நம்ம வளர்ச்சி. உங்க வளர்ச்சி. அது வரைக்கும் இருந்த ஏ/சி அனுபவிங்க’ என்று தண்ணீரில் நனைத்த சேலையை பேன் காற்றின் முன்னே வைத்தாள்– வேனின் வேகத்தில் ஈரச் சேலையில் ஒட்டியிருந்த தண்ணீர்த் துளிகள் இதமாய் சங்கரின் மீதும் அவனின் மகன் மீதும் பட, கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபம் கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *