செய்திகள்

ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் ரெயில் பயணிகளுக்கு மீண்டும் போர்வை வழங்க உத்தரவு

புதுடெல்லி, மார்ச்.11-

ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் ரெயில் பயணிகளுக்கு மீண்டும் போர்வை வழங்கப்பட உள்ளது.

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உள்ள ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. மேலும் இருக்கையில் திரைச்சீலையும் இருந்து வந்தது.

கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு (2021) அதிகமாக இருந்தது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரெயில் பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும் ரெயில்களில் வழங்கப்பட்டு வந்த உணவு வசதியும் அதிரடியாக நிறுத்தப்பட்டது.

படிப்படியாக கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இயல்புநிலை திரும்பி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் ரெயில் பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்பு வழங்க அனைத்து மண்டல ரெயில்வே பொது மேலாளர்களுக்கும் ரெயில்வே அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மட்டும் இன்னமும் வழங்கப்படவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.