சினிமா

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவுக்கு நேரில் போய் ஜெயலலிதா ரசித்துக் கேட்ட ‘கண்ணாளனே…’ பாடல்

சென்னை, செப்.6–

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டு ஆண்டாள் பள்ளி அரங்கில் நடைபெற்றது.

இதில் அர்விந்த் சாமி, தியாகராஜன், விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதித்தி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல் எழுதியுள்ளார்.

ரோஜா திரைப்படத்தில் ஏஆர்.ரஹ்மானை, மணிரத்னம் அறிமுகப்படுத்தியப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள 16–வது படம் இது. முதல் பாடலாக மழைக்குருவி என்ற பாடலை பாடி ஏஆர்.ரஹ்மான் நிகழ்வைத் துவங்கி வைத்தார். செவந்துபோச்சு நெஞ்சே என்ற பாடலை சுனிதா சாரதி பாடினார்.

ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் மணிரத்னம், அவருடைய நாயகன் நாட்களுக்கு சென்றிருக்கிறார் என்றார்.

ஜெயலலிதா ரசித்துக் கேட்ட ‘கண்ணாளனே…’

வைரமுத்து பேசும்போது, ‘மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகளில்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது ‘பம்பாய்’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணாளனே…’ என்ற பாடல்தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு நேரில் வந்து, ரசித்துக் கேட்ட பாடல் என்று பெருமிதத்தோடு கூறினார்.

மணிரத்னம், வைரமுத்து, ஏஆர்.ரஹ்மான் மூவரிடம் இதுவரை பணியாற்றிய பாடல்களில் தங்களுக்கு பிடித்த பாடல் என்ன என நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கார்த்தி – சின்மயி கேட்டார்கள். அதற்கு மூவரும் மூன்று பாடல்களை தெரிவித்தனர்.

வைரமுத்து ‘உயிரே உயிரே…’ பாடலையும், மணிரத்னம் ‘தமிழா தமிழா…’ பாடலையும், ஏஆர்.ரஹ்மான் ‘கண்ணாளனே’ பாடலையும் கூறினர். (அப்போது கண்ணாளானே பாடலில், கண்ணாளனே என்ற வார்த்தைக்காக மட்டும் இரண்டு மணிநேரம் எடுத்துக்கொண்டதாக வைரமுத்து தெரிவித்தார்.)

முன்னதாக மேடையேறிய சிம்பு, நான் நிறைய பேசுவேன். ஆனால், படத்தை பற்றி இப்போ நான் பேச மாட்டேன். படம் பேசும். அதன்பின் நான் பேசுவேன் எனக் கூறினார்.

அரவிந்த் சாமி பேசும்போது, நான் மணி ரத்னத்தின் 6 படங்களில் நடித்திருக்கிறேன். இருவர் படத்தில் பாடி இருக்கிறேன். உயிரேபடத்தில் ஷாருக்கானுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறேன். மொத்தம் 8 படங்களில் அவருடன் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய எல்லா படத்தில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். மேலும் அவர் இயக்கிய மற்ற 12 படங்களில் என்னை ஏன் நடிக்க வைக்க வில்லை என்றும் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் லக்கி. குறிப்பாக இப்படத்தில் அரவிந்த் சாமியுடன் பணியாற்றியது மகிழ்ச்சி என்றார் அதித்ரா.

அருண் விஜய் பேசும்போது,

‘செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் சிறந்த அனுபவம். எல்லா நாட்களும் ஒவ்வொரு புது விஷயம் கற்றுக் கொண்டேன். மணிரத்னம் படத்தில் நடிக்க போறேன் என்று சந்தோஷம் இருந்தாலும், முதலில் டென்ஷனாக இருந்தது. ஆனால் மணி சாரை பார்த்தவுடன் அந்த டென்ஷன் போய்விட்டது என்றார்.

இருந்தாலும் பயம் இருந்துக் கொண்டே இருந்தது. என் பயத்தை போக்கியது அரவிந்த் சாமிதான். இந்த படத்தில் தியாகு கதாபாத்திரம் கொடுத்ததற்கு மணிரத்னம் சாருக்கு நன்றி. அவரைப் பற்றி நான் நினைத்து வேறு. கேமரா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஆக்‌ஷன் என்று சொல்லுவார் என்று நினைத்தேன். ஆனால் வித்தியாசமாக அருகில் வந்து என்ன செய்ய வேண்டும் எப்படி என்று நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார்’ என்று பெருமிதப்பட்டார் அருண் விஜய்.

* * *

தியாகராஜனை மேடையில் பேச வைக்கதாதது ஏன்?

முக்கிய கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடித்திருக்கிறார். நேற்றைய விழாவிலும் பங்கேற்றார். முன் வரிசையில் இருந்தார். படத்தின் கலைஞர்களை ஜோடி ஜோடியாக அழைத்த கார்த்திக் –சின்மயி, தியாகராஜனை மேடைக்கு அழைத்து அவரின் கருத்துக்களை சொல்ல வைக்காதது ஏனோ? பக்கத்தில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகானும் இருந்தாரே. பார்த்த ஞாபகம் இல்லையோ, நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *