நாடும் நடப்பும்

ஏழ்மையை அகற்ற திட்டம் என்ன? நிபுணர்கள், தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நவ.12 ஆலோசனை


ஆர். முத்துக்குமார்


நமது உச்சநீதிமன்றம் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு அரசு வேலைகளிலும் படிப்பிற்கும் விசேஷமாக 10 சதவிகித ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நமது அரசமைப்புச் சட்டத் திருத்தம் சரிதான் என்று உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தந்துள்ளனது.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துதெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ‘‘சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டுகால போராட்டத்தில் இத்தீர்ப்பு ஒரு பின்னடைவு. சமூக நீதிக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய ஒருமித்த கருத்து உடையவர்கள் ஒன்றிணைய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிராக அமைவதுடன் சமூக நீதிகொள்கைக்கும் மாறானது.

எனவே, இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, முடிவெடுக்க ஏதுவாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நவ.12-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவைக் கட்சி சார்பிலும் 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு பெறாத ஏழைகளின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது அல்லவா?

சாதி அடிப்படையிலான சமூக நீதி இடஒதுக்கீட்டை பெற்று இன்றுபலர் உயர் பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். சிலர் குடும்ப பாரத்தை சுமக்க வழியின்றி தவிக்கிறார்கள். அத்தகையோர் குடும்பம் துவண்டு விடாமல் நிமிர்ந்து நடைபோட அரசு உதவிக்கரம் நீட்டியாக வேண்டிய கட்டாயத்தையும் மறந்துவிடக்கூடாது.

மேலும் நமது உச்சநீதிமன்றம் பல்வேறு விவாதங்கள் நடத்திய பிறகே வெளியிட்டிருக்கும் தீர்ப்பாகும். நமது அரசியல் அமைப்பு தந்திருக்கும் வரம்பிற்குள் தானே அந்த உயர்மட்ட நீதிபதிகள் கொண்ட அமைப்பு முடிவெடுத்திருக்கும்?

அதை மனதில் கொண்டு ஜனநாயக மரபுகளை தூக்கி எறிந்து விடாமல், இதை விரும்பாதோர் கருத்துக்களை பதிவிட வேண்டிய நிலையும் உள்ளது, ஜனநாயகத்தை மதிப்பவர்கள் எடுக்கவிருக்கும் முடிவு வரலாற்று சிறப்பு மிக்கதாகவே இருக்கப்போகிறது.

தி.மு.க.வும் பல தேசிய கட்சிகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்நோக்கம் பார்க்காமல் வருங்காலத்தில் வசதி இல்லாத பலர் வாழ்வில் முன்னேற்றம் காண தெளிவான புதிய சிந்தனையையும் உருவாக்க வழி கண்டால் நல்லது.

இந்தியா உலக அரங்கில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துவிட்டது, அதில் ஏழ்மை என்பதே எத்தரப்பினருக்கும் இருக்கக்கூடாது என்பதை ஏற்றுச் சிந்தித்து செயல்திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *