செய்திகள்

ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டி தர முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, மார்ச்.13-

ஏழை–எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தர முன்வர வேண்டும் என்று கட்டுனர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

30 வது அனைத்திந்திய கட்டுனர் மாநாடு ‘தேசத்தை கட்டியெழுப்புவதில் கட்டுமானத்தின் பங்கு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு 3 நாட்கள் நடத்தப்படுகிறது.

இதன் தொடக்க விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்திய கட்டுமான சங்கத்தின் தேசிய தலைவர் ஆர்.என்.குப்தா, கட்டுனர்கள் மாநாட்டு தலைவர் பீஷ்மா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் அகில இந்திய கட்டுனர்கள் மாநாட்டு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பெற்றுக் கொண்டார்.

மாநாட்டை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சொன்னதை மட்டுமல்ல செய்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. ஏனென்றால் தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். ஆனால் 16 அடி பாய்ந்தால் அது எங்கள் தலைவருக்கு (கருணாநிதி) பெருமை அல்ல, 32 அடி பாயவேண்டும். அது தான் நாங்கள் அவருக்கு தரும் பெருமை.

கொரோனா காலத்தில் எத்தகைய சவால்களை இந்த கட்டுமான தொழில் சந்தித்து வருகிறது என்பது இந்த அரசுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடன் பொதுப்பணித்துறையில் தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி (பேக்கேஜ் டெண்டர்) நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ரூ.15 கோடி மதிப்பீட்டுக்கு மேல் உள்ள சிவில், மின் பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஒப்பந்த புள்ளி உச்சவரம்பு ரூ.5 கோடியாக உயர்வு

முன் தகுதி ஒப்பந்த புள்ளிக்கான நிதி உச்சவரம்பு ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. புதிய ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி, மண்டல தலைமை பொறியாளர் தலைமையிலேயே மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஒப்பந்ததாரர் பதிவு ஓராண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தல் என்பது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்று மாற்றி அமைக்கப்பட்டது. மதிப்பீடுகள் தயாரிப்புக்கான தரவை தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தி அமைக்க ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது.

ஒப்பந்ததாரர் வகுப்பு 1ல் பணவரம்பு ரூ.10 கோடி முதல் ரூ.25 கோடியும், செல்வநிலை சான்று ரூ.1 கோடியும் புதிய வகுப்பு 1ஏ ஏற்படுத்தி அதற்கு பணவரம்பு ரூ.25 கோடிக்கு மேல் என்பதை நிர்ணயித்து, அதற்கு ‘சால்வன்சி’ ரூ.3 கோடி என நிர்ணயிக்க வேண்டும் என்றும் பிறவகுப்புகளுக்கு தற்போதுள்ள சால்வன்சி 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கவும் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.

அகில இந்திய கட்டுனர் கழகத்தின் கோரிக்கையை பரிசீலித்து புதிய வகுப்பு 1ஏ ஏற்படுத்தி அதில் சால்வன்சி 10 சதவீதமாக அதாவது ரூ.2.5 கோடி எனவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இதர வகுப்புகளுக்கான சால்வன்சி அனைத்து நிலை ஒப்பந்ததாரர்களும் பயன்பெறக்கூடிய வகையில் 30 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

அரசுக்குத் துணை நிற்க வேண்டும்

நீங்கள் கோரிக்கை வைத்தது போல நானும் ஒரு கோரிக்கையை உங்களிடம் வைக்க போகிறேன். ஏழை-எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தர நீங்கள் முன்வர வேண்டும். அரசின் கட்டிடங்களை தரமாக கட்டித்தந்து வலிமைமிக்க கட்டிடங்களாக கட்டித்தந்து இந்த அரசுக்கு தூண் போல நீங்கள் துணை நிற்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கட்டுமான சங்கத்தின் தெற்கு மைய தலைவர் எல்.சாந்தகுமார் ஏலக்காய் மாலை அணிவித்தார். மாநாட்டு தலைவர் பீஷ்மா ராதாகிருஷ்ணன் செங்கோல் வழங்கி கவுரவித்தார்.

விழாவில் ஜி.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ரூபி மனோகரன், இந்திய கட்டுமான சங்கத்தின் துணைத்தலைவர்கள் எஸ்.அய்யநாதன், மு.மோகன், சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சிவக்குமார், கவுரவ செயலாளர் சேதுராமலிங்கம், கவுரவ பொருளாளர் எஸ்.வெங்கடேசன், துணை தலைவர் கே.ராமானுஜம், இணை செயலாளர் கே.வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.