செய்திகள்

ஏழைக் குழந்தைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம்விட்ட வீராங்கனை

வார்சா, ஆக. 21–

ஓர் ஏழைக் குழந்தையின் சிகிச்சைக்காக, தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டு உதவி செய்துள்ள போலந்து வீராங்கனையின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டி முடிந்து இரண்டு வாரங்களுக்குள் அவர் தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை ஏலம் விட்டு இருக்கிறார்.

போலந்து நாட்டை சேர்ந்த எட்டு மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தவித்த தம்பதிகள் முகநூல் மூலம் விடுத்திருந்த வேண்டுகோளை பார்த்த ஒலிம்பிக் வீராங்கனை மரியா, ஆன்-லைன் மூலம் தனது வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விட்டார்.

அதை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது. அந்தப் பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து வியக்க வைத்துள்ளார். அதே நேரத்தில் பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம், மரியாவின் பரந்த மனதை பாராட்டி இருப்பதுடன் அந்தப் பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *