செய்திகள்

ஏழைகளின் வாழ்வில் ‘கண் ஒளி’ ஏற்றிய சங்கர நேத்ராலயா நிறுவனர் பத்ரிநாத் காலமானார்

‘மருத்துவத்துறைக்கே பேரிழப்பு’ என ஸ்டாலின் இரங்கல்

சென்னை, நவ. 21

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத், இன்று காலை அவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு வயது 83. அவரது மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய கண் மருத்துவமனைகளில் ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா. இதன் நிறுவனர், தலைவர் எஸ். எஸ். பத்ரிநாத் ஆவார். ஏழை எளியோருக்கான கண் மருத்துவ சேவைகளுக்காக 1996ம் ஆண்டு பத்மபூஷன் பெற்றார்.

மேலும் பத்மஸ்ரீ, டாக்டர் பி.சி.ராய் விருது, சிவிலியன் விருது உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். சென்னையில் பிறந்தவர் பத்ரிநாத்.

மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் உயர்நிலை பள்ளியிலும் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் அவர் படித்தார். லயோலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். இதையடுத்து மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் போது, ​​கண் மருத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டு, அந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். அவர் 1962ல் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது பயிற்சியை முடித்த பின்னர், நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் பணியை தொடங்கினார். 1970களில் இந்தியா வந்த அவர் 1976ம் ஆண்டு வரை தன்னார்வ சுகாதார சேவைகளில் பணியாற்றினார்.

1978ம் ஆண்டில், காஞ்சி காமகோடி பீடத்தின் ஆன்மிக குரு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன், டாக்டர் பத்ரிநாத் மற்றும் சிலரது உதவியுடன் சென்னையில் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையை துவக்கினார். சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டு ஏழைகளுக்கு கண் ஒளி வழங்கினார்.

ஸ்டாலின் இரங்கல்

எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ். பத்ரிநாத் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன்.

அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் பத்ரிநாத் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் ‘பத்மபூஷன்’ விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துகளை எழுதி வைத்த

வழக்கறிஞர் பல்கிவாலா

சங்கர நேத்ராலயா மூலம் பத்ரிநாத் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் பத்ரிநாத் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு.

எஸ்.எஸ். பத்ரிநாத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *