செய்திகள் நாடும் நடப்பும்

ஏழைகளின் கண் ஒளி சிறக்க வைத்த டாக்டர் பத்ரிநாத்


ஆர்.முத்துக்குமார்


சென்னை மீது உலகப் பார்வை திரும்ப வைத்த மருத்துவ ஜாம்பவான்களில் ஒருவரான டாக்டர் பத்ரிநாத் தனது 83வது வயதில் இவ்வாரம் காலமானார்.

அவர் நிறுவிய சங்கர நேத்ராலயா இவரது அடையாளமாகும். பல லட்சம் பேருக்கு நல்ல பார்வை தர நிறுவப்பட்ட இம்மையம் குறைந்த செலவில் உலகத்தர கண் மருத்துவம் என்று உறுதிபட சேவையாற்றிட வழி கண்டவர் ஆவார்.

ஏழைகளுக்கு இலவசமாக கண் பார்வை குறைபாடுகளை அகற்றியவர். இலவசமாக கண்புரை சிகிச்சையையும் தினமும் பல ஆயிரம் பேருக்கு தந்து வரும் உன்னத மனம் கொண்டவர் ஆவார்.

அவரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது. பத்ரிநாத்துக்கு மருத்துவர் வசந்தி என்ற மனைவியும் சேஷு, ஆனந்த் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

எஸ்.எஸ்.பத்ரிநாத் (செங்கமேடு சீனிவாச பத்ரிநாத்) 1940–-ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயது முதலே மருத்துவப் படிப்பை லட்சியமாக கொண்டிருந்தார்.1962–-ம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

நண்பர்களின் வழிகாட்டுதலின்படி அமெரிக்க பல்கலைக்கழங்களில் கண் மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்து, விழித்திரை மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். அமெரிக்காவில் பணியாற்ற பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதும் அனைத்தையும் தவிர்த்துவிட்டு இந்தியாவுக்கு வந்து மருத்துவ சேவையாற்ற தொடங்கினார்.

எவ்வித லாப நோக்கமும் இல்லாமல் ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதற்காக மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கினார். 1978-ல் சங்கர நேத்ராலயா கண் மருத்துவக் குழுமம் தொடங்கப்பட்டது.

ஏழை மக்களுக்கு முழுமையாக இலவசமாக கண் மருத்துவ சேவைகளையும் அறுவை சிகிச்சைகளையும் பத்ரிநாத் வழங்கினார். பத்ரிநாத்தின் மருத்துவ சேவையை பாராட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை அவருக்கு வழங்கி கவுரவித்துள்ளன. குறிப்பாக, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பி.சி.ராய் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அவரது மறைவுக்கு பிரதமர், ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மருத்துவ சேவையில் இவரது பார்வை மிக விசாலமானது. தமிழகத்தில் பல பெரிய ஊர்களில் தரப்பட்ட சங்கர நேத்ராலயாவின் சேவையை பெற பிற மாநிலங்களில் இருந்து வருவதை கண்டு, அவர்களின் மாநிலங்களிலும் இதே தரமான கண் மருத்துவ சிகிச்சையை வழங்க அங்கேயும் துவங்கியவர் ஆவார்.

தனது சேவையை நாடே அனுபவிக்க இப்படி தேசிய அளவில் அரும் பணியாற்றிய அவருக்கு தேசிய உயர் விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண் அவரை தேடி வந்ததில் வியப்பில்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் பத்ரிநாத் ஆற்றிவரும் பணிகளை அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா, தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார். இதன்மூலம், இத்துறையில் பத்ரிநாத் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்கு கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு என்று கூறியுள்ளார்.

அவரது மறைவு தேசத்திற்கு பேரிழப்பு. பல லட்சம் ஏழைகளின் பார்வையை உறுதி செய்த ‘கண் தந்த’ தெய்வம் ஆவார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில் மக்கள்குரல், டிரினிட்டி மிரர் பத்திரிக்கை குழுமம், அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து அவரது மறைவால் வாடும் குடும்பத்திற்கும் அவரது மறைவை தாங்கும் வலிமையை மனம் பெறப் பிரார்த்தித்து வணங்குகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *