செய்திகள்

ஏலத்தில் விலை போகாத மோடியின் பரிசு பொருள்கள்

டெல்லி, அக். 8–

பிரதமர் மோடிக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட பல பரிசுப் பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்ட நிலையில், அதில் பல பொருட்களை வாங்க ஆட்கள் யாரும் முன்வரவில்லை என தெரியவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட 1,300 க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம்விட இணையதளம் வாயிலாக நடத்தப்படும் மின்னணு ஏல முறை கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கப்பட்டது.

ஏலத்தில் பங்கேற்போர் இணையதளம் மூலம் அக்டோபர் 7-ம் தேதி வரை பங்கேற்கலாம் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்திருந்தது. ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் ‘நவாமி கங்கா’ திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆர்வம் காட்டவில்லை

இந்நிலையில் ஏலத்தில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பல பரிசுப் பொருட்களை ஏலத்தில் எடுக்க ஆட்கள் முன்வரவில்லை. மின்னணு ஏல இணையதளத்தில் நேற்றைய நிலவரப்படி, 1,348 பொருட்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஆனால், கலாச்சாரத்துறை அமைச்சகம், 1,083 பொருட்களுக்கு ஏற்கெனவே ஏலம் கேட்கப்பட்டுள்ளது. 162 பொருட்களுக்கு மட்டும்தான் யாரும் ஏலம் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ரூ.5000 முதல் ரூ.90 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட பல பொருட்களை வாங்க மக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒவியங்கள், புகைப்படங்கள், பிரதமர் மோடி தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் ஆகியவையும் விற்பனையாகவில்லை.

அதேசமயம், ஏலம் தொடங்கிய முதல் வாரத்தில் சில பொருட்களுக்கு ஏலத்தில் போட்டி கடுமையாக இருந்தது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.1 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, அது ரூ.1 கோடியே 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது என ஆங்கில இந்து நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *