சென்னை, மார்ச் 30–
சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை இடையே ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பதிவில்லா சேவையாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 5 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு, காலை 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும். மாலை 5.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு ஜோலார்பேட்டைக்குச் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த எக்ஸ்பிரஸ் ரயில் அலுவலக நேரத்திற்கு இயக்கப்படுவதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அலுவலக ஊழியர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பணியாளர்கள், பெண்கள் எனப் பலருக்கும் வசதியாக இருந்தது. கொரோனா கால கட்டத்தில் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டபோது இந்த ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
மீண்டும் இயக்கம்
இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து ரயில்கள் சேவையும் தொடங்கியது. முதல் கட்டமாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் முன்பதிவில்லா ரயிலாக இயக்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளர், சென்னை கோட்ட மேலாளர், ரயில்வே வாரிய உறுப்பினர் பொன்.பாலகணபதி உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை இடையே முன்பதிவில்லா ரயிலாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் சென்னைக்குத் தினமும் வந்து செல்லும் ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.