நாடே வாழ்த்துகிறது
ஆர்.முத்துக்குமார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 70–வது பிறந்த நாளை கொண்டாடுகிறார், தமிழகமே அவரை வாழ்த்துகிறது. மக்கள்குரல், டிரினிட்டி மிரர் பத்திரிக்கை குழுமம் அவருக்கு வாழ்த்துக்கூறி மகிழ்கிறது.
நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழகத்தின் ஏற்றத்திற்கு 7 புதிய திட்டங்களை தொடக்கி வைத்து இருக்கிறார். அதில் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1136 கோடியில் 44 மருத்துவமனை கட்டிடங்களும் உள்ளது.
அந்நிகழ்வில் முதல்வர் பேசும்போது, மக்கள் பயன்பெறக்கூடிய பல திட்டங்களை அமுல்படுத்தி வருவதாகவும் எங்களது திராவிட மாடல் ஆட்சியில் ‘தினந்தோறும் திட்டங்கள்’ என்பதே எங்களது திட்டப்பணி என உறுதி அளித்துள்ளார்.
அரசியல் என்பதை அதிகாரம் என்பதாக இன்றி அதை கடமையாகவும் சேவையாகவும் நினைப்பதாகக் கூறியுள்ளார். அதைத்தான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியும் இனமானப் பேராசிரியர் அன்பழகனும் தனக்கு வாழ்வாங்கு வாழ சொல்லிக்கொடுத்த பாடம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது 55 ஆண்டு கால அரசியல் வாழ்வில் அவர்கள் சுட்டிக்காட்டிய வழியில் மக்கள் சேவையாற்றி வருவதாகவும் காலத்திற்கு ஏற்ப இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய அயராது உழைப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்பது தான் தனது முதல் இலக்கும் என்றும் நிரந்தரமான இலக்கு என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் அந்நிகழ்வில் பேசும்போது, முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளது, ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளோம். ரூ.2,563 கோடியில் ஊரக குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். ரூ.18,815 கோடி மதிப்பில் 446 குடிநீர் திட்டப் பணிகள், ரூ.4,499 கோடியில் 23 பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.49,385 கோடியில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக 7 திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தலித் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்துடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பராமரிப்பு, கழிவுநீர் அகற்றும் பணியை நவீன இயந்திரங்கள் மூலமாக மேற்கொண்டு உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்க திட்டமிட்டுள்ளோம்.
தூய்மைத் தொழிலாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்புடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் தூய்மைப் பணியாளர் குடும்பத்தினருக்கு நவீன கருவிகள், வாகனங்கள் வழங்கப்படுவதோடு, திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும். முதலில் சென்னையிலும் தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
அடுத்தது சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் அருமையான திட்டம். 3–-வதாக மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசவீட்டுமனை பட்டா வழங்க உள்ளோம்.
அடுத்து திருநங்கைகளுக்கு மாதஉதவித் தொகை ரூ.1,000-ல் இருந்துரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. 5–-வதாக பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களில் இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.
அடுத்தது முதல்வரின் காலை உணவுத் திட்டம். இதன் அடுத்த கட்டமாக தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு நாளை முதல்விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 56 ஆயிரத்து 98 மாணவர்கள் கூடுதலாக பயனடைவார்கள். 7-–வது திட்டமாக ரூ.1,136.32 கோடியில் 44 இடங்களில் புதிய மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
வளமான, வலிமையான, வறுமையில்லா தமிழகம் உருவாகவும் சுயமரியாதை, சமத்துவம் உறுதி செய்யப்பட்ட வலு ஏற்றப்பட்ட தமிழகத்தை உறுதி செய்ய முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருவதை பார்க்கும்போது தமிழகம் ஸ்டாலினின் பிறந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுவதை புரிந்து கொள்ள முடிகிறது, அவரது பணிகள் தொய்வின்றி தொடர நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்.