போஸ்டர் செய்தி

‘‘ஏரோஸ்பேஸ், ராணுவத் தளவாடம் உற்பத்திக்கான முதலீட்டில் பிரகாசமான வாய்ப்பு’’

சென்னை, ஜன. 23–

‘‘ஏரோஸ்பேஸ், ராணுவத் தளவாட உற்பத்திக்கான முதலீட்டில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உறுதி கூறினார்.

இவ்விரு துறைகளிலும் தமிழகம் எதிர்காலத்தில் முதலிடம் பிடிக்கும் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

சென்னையில் இன்று துவங்கிய உலக முதலீட்டாளர்கள் 2வது மாநாட்டில் எம்.சி.சம்பத் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:–

‘‘இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டை நெம்பர் – 1 மாநிலமாக ஆக்கிடும் வகையில் தொலைநோக்குத் திட்டத்தை எங்களது மரியாதைக்குரிய புரட்சித் தலைவி வகுத்திருக்கிறார். எல்லாத் துறைகளிலும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைக் காணும் விதத்திலான தொலைநோக்கு திட்டம் இது.

இந்த குறிக்கோளை எட்டும் வகையில் அம்மா வகுத்திருக்கும் மகத்தான திட்டம் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023. இந்த குறியீடு ஆண்டுக்குள் அதாவது 2023க்குள் இந்தியாவின் மிகவும் வளமான – முன்னோடி மாநிலமாக தமிழகத்தை ஆக்கிக்காட்டுவதே அம்மாவின் இந்த மகத்தான திட்டம்.

நம்பிக்கையூட்டும் எதிர்காலம்

2015ம் ஆண்டு முதலாவது உலக முதலீட்டாளர்களின் மாநாடு ஆற்றல் மிகுந்த தலைவி அம்மாவின் தலைமையில் நடந்தது. இது மகத்தான வெற்றி பெற்றது. 98 திட்டங்களில் ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு இந்த மாநாடு வழி கண்டுள்ளது. இதில் 64 திட்டங்கள் வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்கான முன்னேற்ற கட்டத்தில் உள்ளன. உண்மையில் சொல்லப் போனால் அவற்றில் பல திட்டங்கள் வர்த்தக ரீதியிலான உற்பத்தியைத் துவக்கிவிட்டன. இந்தத் திட்டங்களுக்கான முதலீட்டுக் காலம் 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகள். ஆகவே பல திட்டங்களை அமுல்படுத்த கால அவகாசம் உள்ளது. அவை அமுல்படுத்தப்படுவதை நாங்கள் உன்னிபாகக் கவனித்து வருகிறோம்.

நம்பிக்கையூட்டும் எதிர்காலம்

2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகள் மகத்தான கடந்த கால வரலாற்றைக் கொண்டது. இப்போது நமது தொலைநோக்கு சிந்தனை முதல்வரின் வழிகாட்டுதலில் ஆற்றல்மிக்க நிகழ்காலமும், மிகவும் நம்பிக்கையூட்டும் பிரகாசமான எதிர்காலமும் உள்ளது.

இந்த உலக முதலீட்டாளர் மாநாடு – புதிய சாதனைகளையும் புதிய சிகரங்களையும் தொடவிருக்கிறது. உலகளவில் உற்பத்தி கேந்திரமாக தமிழகத்தை உருவாக்கிக் காட்டும் உத்வேகத்தில் முதல்வர் முனைப்போடு இருக்கிறார். இந்த மாநாட்டுக்காக கடந்த ஆண்டின் (2018) துவக்கத்திலிருந்து நாம் மேற்கொண்டு வந்திருக்கும் முனைப்பான நடவடிக்கைகள் – பிரச்சாரம் காரணமாக பங்கேற்றிருக்கும் உலக நாடுகளிலிருந்து கணிசமான அளவுக்கு நேரடி வெளிச் செலாவணி நமக்கு கிடைத்திருக்கிறது.

தவிர கணிசமான முதலீட்டுகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் நாம் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம்.

இன்றைய தேதியில் இந்திய அளவில் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்ற நிலையை நாம் அடைந்திருக்கிறோம். அதோடு சிறந்த விதத்தில் செயல்படும் மாநிலமாகவும் தமிழ்நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

என்சிஏஈஆர் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் இந்தியா டுடே ஆகிய பத்திரிகைகளாலும் இப்படி சிறந்த செயல்பாட்டு மாநிலமாக தமிழ்நாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது ஆட்டோமொபைல் உற்பத்தி – ஆட்டோ உதிரி பாகங்கள், எலெக்ட்ரானிக்ஸ், ஹார்ட்வேர், என்ஜினீயரிங், ஜவுளி, தோல், உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றில் (சாப்ட்வேர் வளர்ச்சியும் இதில் உண்டு) தமிழ்நாடு தலைமை இடத்தைப் பிடித்துள்ளது.

பாதுகாப்புத்துறைக்கு 2 காரிடார்கள்

தமிழ்நாட்டில் பாதுகாப்புத் துறைக்கான 2 காரிடார் துறைக்கான 2 காரிடார்களை மத்திய பாதுகாப்பு துணை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் மற்றும் ராணுவ உற்பத்திக் கொள்கை 2019ஐ இன்றைக்கு நாங்கள் அறிவிக்கிறோம். ஏரோ ஸ்பேஸ், ராணுவத் துறை ஆகிய துறைகளில் உற்பத்தி சம்பந்தமாக முதலீடுகளைக் கவர்வதற்கு இந்தக் கொள்கையில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஏரோ ஸ்பேஸ் ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் தமிழ்நாடு தலைமை இடத்தைப் பிடிக்கும் என்று நம்புகிறோம்.

முதல்வர் தலைமையில் தமிழக அரசு 2ம் தலைமுறை சீர்திருத்தங்களைத் துவக்கியுள்ளது. தமிழ்நாடு தொழில்கள் துவக்க எளிமை சட்டம் மற்றும் வழிமுறை இதில் அடங்கும்.

விண்ணப்பங்களை காலவரையிலான செயல் திட்டத்தில் பரிசீலித்தல், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் அனுமதி வழங்குதல, புதிய தொழில் நிறுவனத்தை வெளிப்படையாக ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது. இன்று நாட்டில் மிகச்சிறந்த ஒற்றை சாளர முறை வசதி இது என்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை நான் மீண்டும் உறுதிபட நம்புகிறேன். எக்கச்சக்கமான வாய்ப்புகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆகவே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இந்த மாநாட்டில் கருத்தரங்குகள், விவாதம் மூலம் மிகமிகப் பயனுள்ளதாக இருக்கும். முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய வழிகாட்டும் என்றும் உறுதிபட நம்புகிறேன்.

இவ்வாறு எம்.சி. சம்பத் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *