செய்திகள்

ஏமனின் ஹவுதி இயக்கத்தையும் தீவிரவாதிகளாக அறிவித்த டிரம்ப்

Makkal Kural Official

நியூயார்க், ஜன. 23–

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இயக்கத்தை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு செங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்த குழு, இஸ்ரேல் மற்றும் அதன் தோழமை நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போரின் போது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இந்தக் குழு, ஏமன் மீதான தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது.

மேலும் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் ஹவுதீஸ் குழுவினர், கப்பல்களை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளை சேர்ந்த வணிக கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் ஹவுதிகளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளார். அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த முடிவின் மூலம், ஹவுதி குழுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ஜோ பைடன் பயன்படுத்தியதை விட கடுமையான பொருளாதார தண்டனைகளை இந்த நடவடிக்கை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

டிரம்ப் தடாலடி

செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்கும், முக்கியமான கடல்சார் நெருக்கடி நிலையைப் பாதுகாக்கும் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கும் எதிராக ஹவுதி படை செயல்பட்டு வந்த நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த நடவடிக்கை ஹவுதி படையை பணிய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஹவுதி அமைப்புக்கு உதவும் எவருக்கும் இந்த அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதிபராக பதவியேற்றது முதலே டெனால்டு டிரம்ப் பல்வேறு தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் அவரசநிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டிரம்ப், உலக சுகாதார நிறுவனம், மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் அன்சார் அல்லா என்று அழைக்கப்படும் ஏமனின் ஹவுதி இயக்கத்தை “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு” என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் “ஹவுதிகளின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க குடிமக்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு, நமது நெருங்கிய கூட்டாளிகளின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கடல் வர்த்தகத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *